Thursday, May 8, 2014

இந்து சமயத்தில் நாஸ்திகம்

இந்து சமயத்தில் நாஸ்திகம்





கேள்வி: 
நம்மிடையே ஒரு சாரார் கடவுள் இருக்கிறார் என்றும் மற்றொரு சாரார் கடவுள் இல்லையென்றும் கூறும் நிலைமை ஏன், எப்படி ஏற்பட்டது?

பதில்:
'அஸ்து' என்றால் இருக்கிறது என்று பொருள். 'ந அஸ்து' என்றால் இல்லை அல்லது இல்லாமல் இருக்கின்றது என்று அர்த்தம். இருக்கிறது என்போர் ஆஸ்திகர், இல்லை என்போர் நாஸ்திகர்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்து சமயத்தில் ஒரு மாபெரும் சரிவு ஏற்பட்டது. பெருமளவில் ஊழல்கள்; மனிதன் மனிதனை மதிக்காத நிலை; சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் மக்களிடையே சிந்தனை முடக்கத்தைத் தோற்றுவித்து விட்டனர். சமுதாயத்தில் ஒரு பிற்போக்குவாதம் நீடித்து நிற்க ஆரம்பித்தது. 

அந்த நிலையைத் தகர்ப்பதற்குப் பல சிந்தனையாளர்கள் தோன்றினர். சமுதாய வாழ்வை முடக்கிவைத்துக்கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளினின்றும் மக்களை விடுபடச் செய்வதற்காகப் பலவித முயற்சிகளை மேற்கொண்டு பலவித வழிகளைக் கண்டுபிடிக்கலாயினர். 

இந்து சமயத்துக்கு ஆணிவேராக விளங்குபவை நான்கு வேதங்கள். அந்த வேதங்களை அனுசரித்து மேலும் ஆறு நூல்கள் உள்ளன. அவற்றை அங்க 
நூல்கள் என்பர். சடங்கு என்னும் சொல்லும் சாங்கியம் என்ற சொல்லும் இந்த ஷட் அங்கம் என்னும் சொல்லிலிருந்து ஏற்பட்டவைதாம். வேதங்கள் நான்கினின்றும் தோன்றிய பகுதி நூல்களாக பிராமணங்கள், ஆரண்யகங்கள், கல்ப்ப சூத்திரங்கள், உபநிஷதங்கள் ஆகியவை விளங்கின. இவை தவிர தர்ம நூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஏற்பட்டன. பிராம்மணர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. சமுதாயத்தின்மீது இரும்புப் பிடியை அந்த வர்க்கத்தினர் போட்டு விட்டனர். வேதங்களில் கூறப்பட்டுள்ள தத்துவக் கருத்துக்களைவிட, அவற்றில் காணப்படும் தெய்வங்களை எளிமையாகத் துதிக்கும் முறைகளைவிட, அவற்றில் உள்ள வாழ்வியல் உண்மைகளைவிட அவற்றிலே காணப்படும் யாகங்கள் சடங்குகள் தட்சணைகள் போன்றவையே முக்கியத்துவம் பெற்றன.

இந்தத் தேக்கநிலை மீது பல துறைகளைச் சேர்ந்த பல அறிஞர்களும் 
ஞானியரும் சித்தர்களும் ரிஷிகளும் பல்முனைத் தாக்குதல்களை நடத்தினர்.

அவர்களில் புத்தர் மஹாவீரர் போன்றோர் வேதங்களை அறவே ஒதுக்கி மறுத்து, சடங்குகளைப் புறக்கணித்து, புதிய கோட்பாடுகளுடன் புதிய சமயங்களைத் தோற்றுவித்தனர். 
புத்தர் பெயரால் தோற்றுவிக்கப்பட்ட மதத்தில் கடவுள் கொள்கை 
கிடையாது. வேதங்களும் கிடையாது. தம்மபாதா போன்ற வேறு பல நூல்களை அவருடைய சீடர்கள் ஏற்படுத்திக்கொண்டவர்.

சமண மதத்தில் அருகன், ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான் 
போன்ற பெயர்களால் வழங்கப்படும் ஓர் இறைவனையும் அவனுக்குப் பரிவார சக்திகளாகப் பல தெய்வங்களையும் வணங்கினர். வேதங்களுக்குப் பதில் இவர்கள் ஸ்ரீபுராணம் என்னும் நூலையும் இன்னும் பல நூல்களையும் ஏற்படுத்திக் கொண்டனர்.

வேதங்களின் அடிப்படையில் உள்ள சம்பிரதாயங்களில் கர்ம காண்டம், ஞான காண்டம் என்ற இரண்டு வகைகள் இருந்தன. 
கர்ம காண்டத்தைக் கடைபிடிப்பவர்களைப் 'பூர்வமீமாம்சகர்'கள் என்பர். வேதங்களில் சொல்லப்பட்ட சடங்குகள் கடமைகள் ஆகியவற்றை மட்டுமே இவர்கள் சிரத்தையாகச் செய்தனர். பூர்வமீமாம்சையில் கடவுள் கொள்கையே கிடையாது. இக்கோட்பாட்டை நிறுவியவர் ஜைமினி என்னும் பெரிய ரிஷி.  
குமரில பட்டர், மண்டனமிஸ்ரர் போன்ற மிகப் பெரும் அறிஞர்கள் இந்த 
மதத்தில் இருந்தனர். இவர்களை ஆதிசங்கரர் வென்று கடவுள் கொள்கையை ஏற்றுக் கொள்ளச் செய்தார்.

வேதங்களை ஏற்றுக் கொள்ளாத இன்னொரு சமயமும் இருந்தது அதன் பெயர் 'லோகாயாதம்'. 'கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; அனுபவிப்பதே உண்மை நோக்கத்தின் வழி. நோக்கத்தின் வழி காரணம்; காரணத்தால் காரியம்; காரியத்தின் மூலம் பலன்; இவ்வாறுதான் தர்க்க ரீதியாக அதன் தத்துவங்கள் செல்லும்.

இதில் இறைவனுக்கே இடமில்லை. பச்சையான நாத்திக வாதம். இந்த மதத்தில்  உயிர், இறைவன், மறுமை, பாவம், புண்ணியம் கற்பு முதலிய பல விஷயங்கள் கிடையாது. வல்லவன் வகுத்ததே சட்டம், வழி, நியதி, நீதி எல்லாம். உடலும் உலகுமே மெய்.... இப்படியாக மிக விரிவாகவும் ஆணித்தரமாகவும் இவ்வாதம் விவரித்துக் கொண்டே போகும்.

இதைச் சாருவாகம் என்று அறிஞர்கள் அழைத்தனர்.
இந்த வாதத்தில் மேலும் ஆறு உட்பிரிவுகள்இருந்தன.  அவற்றிலொன்று 
பார்ஹஸ்பத்தியம் எனப்படுவது. 
அசுரர்களின் குருவாக சுக்கிரன் இருந்தார். அசுரர்களின் பயங்கர விரோதிகள் தேவர்கள்.  அவர்களின் குருவானவர் பிரஹஸ்பதி. சுக்கிரன் நீண்ட தவம் செய்யச் சென்ற சமயத்தில் பிரஹஸ்பதி தம்மைச் சுக்கிரன் போன்று உரு மாற்றிக்கொண்டு அசுரர்களிடம் வந்து, மிகத் தவறான வேத சாஸ்திர சம்பிரதாய, நீதிகளுக்கு விரோதமானவற்றை உபதேசித்தார். அசுரர்கள் கடவுளையும் மற்ற தெய்வங்களையும் மறந்து சடங்குகள் யாகங்கள் முதலியவற்றைச் செய்யாமல் மறைநெறிகளுக்குப் புறம்பாக நடந்து தங்களின் சக்திகளையெல்லாம் 
இழந்தனர். பிரஹஸ்பதி பரப்பிவிட்ட நாத்திக வாதத்தால் அசுரர்களின் தவ வலிமையும் ஆன்மீக ஆற்றலும் மிகவும் குன்றியது. போலி சுக்கிரனாக பிரஹஸ்பதி வந்து உபதேசித்ததால் இந்த சித்தாந்ததுக்கு பார்ஹஸ்பத்யம் என்று பெயர். இதுவும் நாத்திக வாதம்தான். 

உபநிஷதங்கள் மிகச் சிறந்த தத்துவங்களை உள்ளடக்கியவை.இவற்றில் சில தத்துவங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை விவரித்து வியாக்கியானம் செய்த உட்சமயங்களும் உண்டு. அவற்றில் ஒன்று சாங்க்யம். இதை நிறுவியவர் கபிலர் என்னு ரிஷி. வேதங்களை சாங்க்யம் ஏற்றுக்கொண்டது. ஆனால் கடவுள் கொள்கையை இது ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே இதை 'நிரீசுவர சாங்க்யம்' என்று குறிப்பிட்டார்கள்.

பிற்காலத்தில் வந்த சாங்க்யர்கள் கடவுள் தத்துவத்தை ஏற்றுக்கொண்டனர். இவர்களை 'சேஸ்வர சாங்க்யர்' என்று குறிப்பிட்டார்கள்.

கோயில்களையும் சடங்குகளையும் சாஸ்திரங்களையும் அறவே வெறுத்து மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றனர் சிவவாக்கியர் போன்ற சித்தர்கள்.

இந்து சமயத்தில் மட்டுமே நாத்திகம் உண்டு எண்ணிவிடாதீர்கள். 
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய கிரேக்க 
நாட்டில் எப்பிக்கியூரஸ், ஸீனோ, டெமாக்ரிட்டஸ் போன்றவர்கள் அவரவர் பாணியில் நாத்திக வாதத்தை ஏற்படுத்தினர்.  ஸ்கெப்டிஸ்ட் என்னும் ஒருவகை நாத்திகமும் பரவியிருந்தது.

கிருஸ்தவ மத்தைச் சேர்ந்தவர்கள் ஏக்நாஸ்ட்டிக் எனப்படும் நாத்திகத்தை ஏற்படுத்தினர். தலை சிறந்த அரசியல் வல்லுனராகிய மாக்கியவல்லி, ரேனே டேய்கார்ட் போன்றவர்களின்  கொள்கையில் இந்த சாயல் மிக அதிகமாக இருக்கும். 
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர் இங்கர்ஸால். ஒரு மாலை நேரச் சொற்பொழிவுக்கு மூவாயிரத்து ஐந்நூறு டாலர்களை அந்தக் காலத்திலேயே வாங்கியவர் இங்கர்ஸால். 'நான் ஏன் ஒரு ஏக்நாஸ்ட்டிக்' - 'நான் ஏன் நாத்திகன்'  என்னும் நூல் பகுத்தறிவுபூர்வமாகச் சிந்திக்கும் ஆத்திகர்களால் கட்டாயமாகப் படிக்கப்பட வேண்டிய நூல். அறிஞர் அண்ணாவின் சிந்தனையில் மிகப் பெரிய தாக்கத்தைத் தோற்றுவித்தவர் இங்கர்ஸால்தான்.

ஐரோப்பிய சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் வால்ட்டேய்ரும் ரூஸோவும்தாம். வால்ட்டேய்ர் ஒரு சிறந்த நாத்திகவாதி.
இவர்கள் அனைவரின் சிந்தனையையும் தூண்டிவிட்டவர் பெனடிக் தே ஸ்பிநோஸா. இவர் ஒரு யூதர். இவருடைய கொள்கைகள்தாம் இன்றளவும் ஐரோப்பிய பகுத்தறிவு வாதச் சிந்தனைகளை மிகவும் பாதித்து வருகின்றன.

நாத்திக வாதம் இந்து சமயத்தில் எப்போதுமே நிலவி வந்திருக்கிறது.. 
கடவுள் இல்லை என்று கூறுபவர்களை 'நிரீசுவர வாதி'கள் என்று 
குறிப்பிடுவார்கள்.
எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய தந்தையார் சின்னமுத்துப்பிள்ளையை அப்படித்தான் அந்தக் காலத்தில் வாழ்ந்த தென்கிழக்காசிய இந்துப் பிரமுகர்கள் அழைத்தனர். 

அதன் நிமித்தம் 'கடவுளின் உண்மைத் தோற்றம்' என்ற தலைப்பில் 
1936-ஆம் ஆண்டில் என் தந்தையார் ஒரு சிறிய விளக்க நூலை எழுத 
நேரிட்டது. அந்தச் சிறுநூலைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல் 
அக்காலத்துத் தமிழ் நேசன் பத்திரிக்கை அச்சிறு நூலைத் தாக்கி ஒரு தலையங்கமே எழுதிவிட்டது.

பெரியாரைப் பற்றி யார் யாரோ ஏதேதோ கூறுவார்கள். ஆனால் 
உண்மையிலேயே பெரியாரின் நாத்திக வாதத்தால் இந்து சமயம் நன்மையே பெற்றது என்பதுதான் ஆணித்தரமான அசைக்கமுடியாத யதார்த்தமாகும். 
நாத்திக வாதம் எந்தக் காலத்திலும் இந்து சமயத்துக்கு மிரட்டலாக 
விளங்கியதேயில்லை. உண்மையிலேயே அதனால் அவ்வப்போது இந்து சமயம் புத்துணர்வு பெற்றே வந்திருக்கிறது. இதுதான் உண்மை. 

நம் சமுதாயத்தில் பல நாத்திகர்கள் மற்றவர்களைவிடச் சிறந்த 
நேர்மையாளர்களாகவும் பெரும் சிந்தனையாளர்களாகவும் மேதைகளாகவும் விளங்கியிருக்கின்றனர். சமுதாயத்தில் மலிந்துவிட்ட பிற்போக்குவாதத்தைத் தைரியமாக எப்போதுமே எதிர்த்து வந்துள்ள வீரமிகு சிறுபான்மையாளர்கள் அவர்கள்.

Charles de Gaulle - பாரிஸ் விமான நிலையம்

ஓநாயின் நாள் - 
DAY OF THE JACKAL



        Frederic Forsythe பற்றி எழுதிக்கொண்டிருந்தேன். 
அவர் எழுதிய கதைகளிற் சில, படங்களாக வந்துள்ளன. Day Of The Jackal, Odessa File, Dogs Of War ஆகியவை நினைவுக்கு வருகின்றன. ஜாக்கால் கதையின் தொடர்ச்சி கூட வந்தது. ப்ரூஸ் வில்லிஸ் நடித்த படம். அதன் ஒரிஜினலில் 
ஜாக்கால் பாத்திரத்தில் Edward Fox நடித்திருப்பார். காந்தி படத்தில் ஜாலியன் வாலா பாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டையராக நடித்த அதே ஆசாமிதான்.

'The Afgan' புத்தகத்துக்கு முன்னர் 'The Veteran' என்னும் புத்தகத்தை எழுதி யிருக்கிறார். அது நான்கு குறுநாவல்களைக் கொண்டது. இரண்டு சிறுகதைத் 
தொகுப்புகளும் உள்ளன.

·பார்ஸித் எழுதியவற்றில் மிகச் சிறந்ததாகச் சொல்லப்படுவது ஜாக்கால் கதைதான். அதை ஒட்டி ஒடெஸ்ஸா ·பைல் வரும்.

இரண்டு நூற்றாண்டுகளாகக் கஷ்டப்பட்டு  உலகத்தின் முக்கிய பகுதிகளில் பல காலனிகளை ·பிரான்ஸ் பிடித்து, சேர்த்து வைத்து ஆண்டு கொண்டிருந்தது. பல ஆ·ப்ரிக்க நாடுகள், இந்தோசீனா, க்யானா, மொரோக்கோ, அல்ஜீரியா என்று இங்கும் அங்குமாக இருந்தன.
இரண்டாம் உலக யுத்த முடிவில் காலனித்துவ 
எதிர்ப்பு உலகெங்கும் ஓங்கியது. 
இந்தோச்சீனாவை உலக யுத்தத்தின்போது ஜப்பானியர் கைப்பற்றி யிருந்தனர். ஜப்பான் தோல்வியுற்ற பின்னர் இந்தோச்சீனாவை ·பிரான்ஸ் மீண்டும் தன் ஆட்சிக்குள் கொண்டுவர முற்பட்டது. 
ஆனால் ஹோச்சீமின் என்னும் வியட்நாமியப் பொதுவுடைமைத் தலைவரின் படைகளுடன் டியென் பியென் பூஹ் என்னும் இடத்தில் ஏற்பட்ட போரில் ·பிரான்ஸ் படுதோல்வியுற்றது. 
·பிரான்ஸ் அந்த வாக்கில் இந்தோசீனாவைக் கைவிட்டுவிட்டு வெளியேறியது. 
இந்தப் போரில் முக்கிய பங்கெற்ற படைப் பிரிவு French Foreign Legion என்பது. 
·பிரெஞ்சுக்காரர் அல்லாத பிற நாட்டினர்கள் சேர்ந்த படைப் பிரிவு அது. 
அதில் சேர்பவர்களின் விபரங்கள் அதிரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். ஆகவே எங்கெங்கிருந்தோ ஓடி வந்தவர்களெல்லாம் ·பாரின் லீஜனில் இருந்தனர். பிடிபடாத நாட்ஸி ஜெர்மானியர் பலர் இருந்தனர். 
அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கி நல்ல வருமானத்தையும் கொடுத்து ·பிரான்ஸ் வைத்திருந்தது. பயங்கரக் குற்றவாளிகள், முரடர்கள், கொலை வெறியர்கள் போன்றோரெல்லாம் இருந்தனர். ஆனால் அதைவிட கடுமையான கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் லீஜன் படையில் இருந்தன. ஆகவே லீஜனில் ஒழுங்கும் கட்டுப்பாடும் அதிகம். போர் என்று வந்தால் மிகக் 
கடுமையாகப் போரிடுவார்கள். ·பாரின் லீஜன் அதன் பயங்கரத்துக்குப் பேர் போனதாக விளங்கியது. 
எப்போதுமே வெற்றி பெற்று வந்த படை அது. 
அப்பேற்பட்ட படையை வியட்நாமியர்கள் தோற்கடித்தனர். 
இந்தோச்சீனாவைத் தொடர்ந்து வட ஆ·ப்ரிக்காவில் உள்ள அரபு நாடாகிய அல்ஜீரியாவில் புரட்சி ஏற்பட்டது. அல்ஜீரிய விடுதலைப் படையுடன் ஏற்பட்ட போர்களில் ·பிரான்ஸ¤க்கு அதிக சேதம். 
அல்ஜீரியாவும் டூனீஸியாவும் மொரோக்கோவும் மத்தியதரைக்கடலில் ·பிரான்ஸ¤க்கு எதிர்க்கரையில் இருந்தன. அவற்றின் கடற்கரை ஓரப் பிரதேசங்கள் வெப்பம் அதிகம் இல்லாமல் நன்றாக வளமாக இருந்தன.  
தென் ·பிரான்ஸின் சீதோஷ்ண நிலையை அனுசரித்து இருந்தன. 
ஆகவே அந்த இடங்களில் ·பிரெஞ்சுக்காரர்கள் ஏராளமாகக் குடியேறி யிருந்தனர். திராட்சைத் தோட்டம் அது இது என்று தடபுடலாக வாழ்ந்து வந்தனர். 
அல்ஜீரியாவைட்டு ·பிரான்ஸ் அகன்றுவிட்டால் அங்கிருந்த ·பிரெஞ்சுக் காரர்கள் பாடு அதோகதிதான். ஆகவே அவர்களும் படையைத் திரட்டிக் கொண்டு அரபுகளுடன் போரிட்டுக்கொண்டிருந்தனர். ·பிரான்ஸின் 
தீவிர வலதுசாரிகள் இவர்களை ஆதரித்தனர். 
ஆளாளுக்கு கெரில்லாப் போர்களைப் புரிந்துகொண்டிருந்தனர்.
·பிரான்ஸின் நிலைமை நாளுக்கு நாள் படுமோசமாகிக்கொண்டிருந்தது. 
·பிரான்ஸின் அரசு அடிக்கடி மாறிக் கொண்டிருந்தது. அதன் நாணய மதிப்பும் குறைந்து பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டது. அடிக்கடி அரசுகள் கவிழ்ந்துகொண்டேயிருந்தன.
அப்போது சார்ல்ஸ் தெ கால் Charles de Gaulle என்னும் மாஜி தளபதி ஆட்சியைக் கைப்பற்றினார். 
இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனிலிருந்து ·பிரெஞ்சுப் படையைத் திரட்டிக்கொண்டு ·பிரான்ஸில் இருந்த ஜெர்மானியருடன் போரிட்டவர். பாரிஸை விடுவித்தவர்.
உலக யுத்த முடிவில் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிக்கொண்டவர். 
·பிரான்ஸை மீண்டும் காப்பாற்றவேண்டி அவர் ஆட்சியைப் பிடித்துக்கொண்டார். 
·பிரான்ஸை நிலைநிறுத்துவதற்கு இருந்த வழி, அதனுடைய காலனிகளுக்கு சுதந்திரம் கொடுப்பதுதான். அந்த நாடுகள் விரும்பினால் ·பிரான்ஸ் நாட்டின் மாநிலமாக விளங்கலாம். கடலுக்கப்பாலுள்ள மாநிலங்கள் என்ற விசேஷப் பிரிவில் பல குட்டிநாடுகள் வந்தன. 
இருப்பனவற்றில் அல்ஜீரியாவே சிக்கல் மிகுந்ததாக இருந்தது. ஏனெனில் அதைத் தாய்நாடாகக் கொண்டிருந்த ·பிரெஞ்சுக்காரர்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்தனர். அவர்களோ சுதந்திரத்தை வெறுத்தனர். 
தே கால் வரிசையாக எல்லாக் காலனிகளையும் விடுவிக்க ஆரம்பித்தார். 
அல்ஜீரியாவுக்கும் சுதந்திரம் கொடுக்க ஏற்பாடு செய்தார். 
இதை நிறுத்தவேண்டுமானால் ஒரே வழிதான். தே காலைப் போட்டுத் தள்ளுவது. 
மலேசியத் தமிழ் கலாச்சாரப்படி "தூக்குங்கடா அவன!".
தே காலைத் தூக்குவதற்குப் பெரும்பணத்தை எப்படியோ திரட்டி ஒரு கொலையாளியை ஏற்பாடு செய்து வலச்சாரியினர் அனுப்பினர். 
அந்த ரகசியக் கொலையாளியின் பெயர் யாருக்கும் தெரியாது. 
Chakal என்ற பெயரால் அவன் விளங்கினான். ஆங்கிலத்தில் Jackal. அதாவது ஓநாய்.
தெ காலைக் கொலைசெய்ய ஜாக்கால் செய்த முயற்சி, போட்ட திட்டம், அதை ஸ்பெஷல் டிட்டெக்டிவ் ஒருவர் முறியடித்து அவனைக் கொன்றது.....
இதுதான் Day Of The Jackal கதை.

வெண்ணிலவு பெண்ணரசி

அன்பர்களே,

மீ ப சோமுவைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். அவருடைய 
வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். நண்பர் கூட்டிச் சென்றார். திருநெல்வேலி 
சைவப் பிள்ளை. நல்ல செக்கச் செவேலென்ற சிவப்பு.  நானும் சைவப்பிள்ளை 
என்று நினைத்துக்கொண்டு நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார். 
மிகவும் ஆழமான புலமையும் ஞானமும் உடையவர் என்பது நன்கு 
தெரிந்தது. 
அவர் எழுதிய வெண்ணிலவு பெண்ணரசியை ஊன்றிப் படித்திருக்கிறேன். 
ஏனெனில் அது ஒரு வரலாற்றுக் கதை. 
சங்க இலக்கியத்திலிருந்து சம்பவங்களை எடுத்து, அதிலுள்ள கதை 
மாந்தர்களை வைத்து எழுதியிருந்தார். 
நான் படித்தது 1973க்கு முன்னர். 1963க்குப் பின்னர். அந்த இடைப்பட்ட 
காலத்தில் படித்தது. 
அப்போது அந்த நாவல் என்னுடைய கடார ஆராய்ச்சிக்கு 2000-ஆம் 
ஆண்டில் உதவும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 
அது விநோதமான தொடர்பு. 
கதை சங்க காலத்தில் நடந்தது. கதை சரியாக ஞாபகத்தில் இல்லை. 
Salient Facts-ஐ மட்டும் சொல்கிறேன்.
நன்னன் என்னும் மன்னன் ஒருவன். அவன் நீலமலைப் பிரதேசத்தை ஆண்டவன். நீலமலைப் பிரதேசம் தற்கால கோயம்புத்தூர் மாவட்டத்தில் 
இருக்கும். அந்தக் கதையில் என்னுடைய மூதாதையராகிய நான்மொழிக் 
கோசர் வருவார்கள். கோசர்கள் என்போர் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் 
அல்லர். 
அவர்களின் பூர்வீகம் தற்கால ஈரானின் வடமேற்குப் பகுதி. அங்கு Kossians என்ற குடியினர் வாழ்ந்து வந்தார்கள். Kissians  என்னும் பெயரும் உண்டு. அவர்கள் நான்கு பிரிவினராக இருந்தனர். அவர்கள் சங்க காலத்துக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு வந்து விட்டனர். தமிழ்நாட்டிலும் நான்கு பிரிவாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் தொழில் போர் புரிதல். 
பல மன்னர்களின் படைகளில் கோசர் பிரிவு இருந்தது. 
இவர்களின் பெயரால்தான் கோசன்புத்தூர் என்னும் கோயம்புத்தூர் ஏற்பட்டது என்பார்கள்.
பிற்காலத்தில் - சோழர்கள் காலத்தில் இருந்த கைக்கோளர் 
பெரும்படையில் இருந்த 'தெரிஞ்ச' கைக்கோளர்கள் கோசர்களின் வழியில் வந்தவர்கள். 
அந்தக் காலத்தில் மன்னர்கள், சிற்றரசர்கள் முதலியோர் தங்களுக்கென்று அரச லாஞ்சனை, முரசு, பதாகை, கொடி, குதிரை, 
யானை, பல்லக்கு, கத்தி போன்றவற்ரை வைத்திருப்பார்கள். அவர்களுக்குக் குலதேவதையும் இருந்தது. அத்துடன் 'காவல் மரம்' என்றும் ஒன்று இருந்தது. 
காவல் மரம் என்பது பண்டைய குடியினரின் தெய்வம். அதற்குக் 
காவலும் போட்டு யாரும் அதை ஏதும் செய்துவிடாமல் பார்த்துக்
கொள்வார்கள்.
நன்னன் என்பவன் ஒரு சிற்றரசன். அவன் பூழி நாடு என்னும் 
பிரதேசத்தை ஆண்டுவந்தவன். அது தற்காலக் கேரளா, கொண்கான தேசம், கொங்குநாட்டுப் பகுதிகள் அடங்கியது. நீலமலை என்பதும் அவனுடைய நாட்டிற்குள் அடங்கியது. 
சங்க காலத்தில் முடியுடை வேந்தர் மூவராகிய சேர சோழ 
பாண்டியர்கள் தமிழகம்/கேரளத்தை ஆண்டுவந்தனர். இவர்களை முடியுடை வேந்தர் என்பார்கள். அவர்களைத் தவிர வேளிர் என்போரும் மான்கள் என்போரும் சிற்றரசர்களாக ஆண்டு வந்தனர். பதினெட்டு வேளிர்களுடன் மற்ற சிற்றரசர்களையும் சேர்த்து இருபதுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். 
சேர சோழபாண்டியர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டேயிருந்தனர். இந்த சிற்றரசர்களும் தங்களுக்குள் போரிட்டுக்கொண்டனர். பல சமயங்களில் முடியுடை வேந்தர்களின் போர்களிலும் கட்சி ட்டிக்கொண்டு சண்டையிட்டனர்.
இன்னும் கொஞ்சம் கதையை ஞாபகப்படுத்திக்கொண்டு எழுதுகிறேன். 

அன்புடன்

ஜெயபாரதி


அன்பர்களே,

சங்க இலக்கியத்தில் இரண்டு நன்னன் களைக் காணலாம். நன்னன் 
சேய் நன்னன் என்றும் நன்னன் வேண்மான் என்று ஒருவன். அவன் ஒரு 
பெரிய வள்ளல். வேளிர் குலத்தோன். 
இவனுடைய தந்தைதான் அந்த இன்னொரு நன்னன். கொடுங்கோலன். 
புலவர்கள் வந்தால் கதவை அடைத்துக்கொள்பவன். 
இவன் ரொம்ப ரொம்ப ஓவியமாக அருமையான மாமரம் ஒன்றை 
வைத்திருந்தான். அது மிகச் சுவையான பழங்களை தரக்கூடியது. 
ஐந்தாண்டுகள் தனக்காகவே பாதுகாத்துவந்த பின்னர் மிக அருமையாக 
அந்த மரம் காய்க்க ஆரம்பித்தது. அதில் ஒரு பழம் பழுத்தவுடன் 
மரத்திலிருந்து விழுந்து அருகில் இருந்த ஆற்றில் போய்ச்சேர்ந்தது. 
ஆற்றின் போக்கில் போய் ஓரிடத்தில் ஒதுங்கியது. அங்கு குளித்துக் 
கொண்டிருந்த பெண் ஒருத்தி அந்தப் பழத்தை எடுத்து சாப்பிட்டாள்.
மரத்திலிருந்த கணியைக் காணாதவுடன் நன்னனின் ஆணையால் தேட 
முற்பட்டனர். அந்த ஆற்றங்கரைப் பெண் மாம்பழத்தை உண்டுவிட்டாள் 
என்பது தெரிந்ததும் அந்தப் பெண்ணைப் பிடித்து வரச்செய்து அவளைக் 
கொன்றுவிடுமாறு நன்னன் உத்தரவிட்டான். 
அந்தப் பெண்ணுடைய தந்தை தன்னுடைய பெண்ணின் எடைக்கு எடை பொன்னையும் பல யானைகளையும் நன்னனுக்குத் தருவதாகச் சொல்லி, 
தன் பெண்ணைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுக்கொண்டும் நன்னன் அவளைக் கொல்லச் செய்தான். 
சங்க இலக்கியம் அவனைப் பெண்கொலை புரிந்தவன் என்று 
குறிப்பிடுகிறது.
அந்தக் காலகட்டத்தில் சேரநாட்டைக் களங்காய்க்கண்ணி 
நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னன் ஆண்டுவந்தான். சேரல் நன்னனை 
அழிப்பதற்காக அவனுடைய படையை அனுப்பினான். சேரலுடைய 
படைத்தலைவன் வேளிர் குலத்தைச் சேர்ந்த பெருவீரனும் சிற்றரசனுமாகிய 
ஆஅய் எயினன். இவனும்கூட பெரும் கொடையாளி. வேண்டியவர்களுக்கு 
யானை முதலியவற்றைக் கொடுப்பவன். நானெல்லாம் எனக்கு 
வேண்டாதவர்களுக்குத்தான் யானையைக் கொடுப்பேன். இது சம்பந்தமாக அந்தகக் கவி வீர ராகவ முதலியார் நிகழ்ச்சியும் பாடலும் உண்டு. 
நன்னனுடைய படைத்தலைவன் மிஞிலி என்பவன். பெரும் வீரன்.  
மிகத் திறமையான போராளி. அவனைப் பற்றி எச்சரித்திருந்தும் ஆஅய் 
எயினன் அவனுடன் பாழி என்னும் இடத்தில் போரிட்டான். நன்னனுக்கு 
ஏதோ Black Arts தெரிந்திருக்கிறது. அந்த இடத்திலிருந்துகொண்டு 
மிஞிலிக்குக்குக் கட்டளையிட்டபடி ஆஅய் எயினனை மிஞிலி எதிர்த்து 
நின்று போரிட்டு, ஒரே பகற் பொழுத்துக்குள் வேலெறிந்து மிஞிலி ஆஅய் 
எயினனைக் கொன்றான்.
ஆஅய் எயினனுடைய தர்மம் அவனைக் காத்தது. வீழ்ந்து கிடந்த 
அவனுடைய உடலின்மீது வெய்யில் படாதவாறு பறவைக் கூட்டம் ஒன்று இறக்கைகளை விரித்துப் பறந்து அவன் உடலுக்கு நிழல் கொடுத்தது.
தன்னுடைய படைத்தலைவன் இறந்தான் என்பதை அறிந்த 
நார்முடிச்சேரல் பெரும்படையுடன் வந்து பெருந்து¨றையென்னும் இடத்தில் 
நன்னனுடைய காவல் மரமாகிய வாகையை வெட்டி எறிந்தான். அந்த இடத்துக்கு வாகைப் பறந்தலை என்ற பெயர் ஏற்பட்டது. 
இதனால் வெகுண்ட நன்னன் தன்னுடைய பெரும்படையோடு வந்து 
பலநாட்கள் சேரலுடன் போரிட்டான். முடிவில் சேரலனுடைய படையால் 
கொல்லப்பட்டான்.
இதுவரை நான் சொன்னது புறநானூறு, மதுரைக்காஞ்சி போன்ற 
சங்க நூல்களில் காணப்படும் கதை.
இதைத்தான் வெண்ணிலவு பெண்ணரசியாக மீப சோமு எழுதியிருந்தார்.

அன்புடன்

ஜெயபாரதி


அன்பர்களே,

மீ.ப.சோமுவும் வெண்ணிலவு பெண்ணரசியின் கதைக்கு மூலாதாரத்தைச் 
சொல்லிவிட்டேன். இதிலிருந்துதான் அவர் கதையைப் பின்னியிருக்கிறார். 
இந்தக் கதையில் உள்ள நீலமலையில் நீலக்கற்கள் கிடைக்கும். 
அவற்றை யவனர்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். இந்த வாணிபத்தில் 
நன்னனுக்குப் பெரும் பொருள் சேரும். 
நீலக்கல்லுக்கு குருந்தங்கல் என்ற பெயரும் உண்டு. இந்தக் கல் 
ரோமாபுரியில் மிகவும் விருப்பமுடன் வாங்கப்பட்டது. ஆபரணத்துக்கு 
மட்டும் அல்ல. அந்தக் காலத்தில் ரோமர்களும் மற்றவர்களும் வரைந்த 
வண்ண ஓவியங்களுக்கும் டிஸைன்களுக்கும் நீல நிறத்துக்குக் 
குருந்தங்கல் மிகவும் பயன்பட்டது. பளிச்சென்று ஒளியை வாங்கி விடக்
கூடியது அந்தக் கல்லின் நீலநிறம்.
ரோமர்களின் லத்தீன் மொழியில் குருந்தத்தைக் 'கொருண்டும்' 
Corundum என்று அழைத்தார்கள்.
ஆங்கிலத்திலும் இதே சொல்தான் வழங்குகிறது. 
தமிழ் மூலத்தைக்கொண்ட மேற்கத்தியச் சொற்களாகிய அரிசி, சர்க்கரை, இஞ்சிவேர், கறி ஆகிய சொற்களுடன் சேர்க்கப்படவேண்டியது குருந்தமும்தான். 
யவனர்களைப் பற்றியும் அவர்களின் வாணிபத்தைப் பற்றியும் சோமு 
விபரமாகச் சொல்லியிருப்பார்.
யவனர்கள், இந்த நீலக்கல் ஆகிய விஷயங்கள் எப்படியோ என்னுடைய மனதிற்குள் முகுந்து எங்கோ ஆழத்தில் ஒட்டிக்கொண்டு கிடந்தது.
ரொம்ப நாள் கழித்து.... ரொம்ம்ம்ப்ப்ப நாள் கழித்து.......
நான் மலேசியாவுக்கு வந்த பிறகு மலாயாவின் கிழக்குப் பகுதி 
மாநிலங்களில் வேலை பார்த்துவிட்டு, 1984-இல் மேற்குப் பகுதியில் உள்ள 
சின்ன ஸ்டேட் ஆகிய பெர்லிஸ¤க்கு வந்தேன். 
அதெல்லாம் பழங்காலத்திலிருந்த கடார நாட்டின் பகுதியாக இருந்தது. 
இப்போது தனி ஸ்டேட்டாக இருந்தாலும் அது ஒரு காலத்தில் கெடாஹ் 
ஸ்டேட்டின் பகுதியாக இருந்ததுதான். 
இந்தக் கெடாஹ் ஸ்டேட்தான் பழங்காலத்தில் கடாரமாக இருந்தது.
கெடாஹ்வில் புஜாங் பள்ளத்தாக்கு என்ற இடம் இருக்கிறது. இங்கு 
பழைய சின்னங்கள் இருக்கின்றன. ஒரு மியூஸீயமும் இருக்கிறது. 
அந்த மியூஸீயத்துக்கு நான் அடிக்கடி செல்வதுண்டு.
1989-இல் கெடாஹ் ஸ்டேட்டின் தலைநகராகிய அலோர் ஸ்டாருக்கு 
வந்துவிட்டேன்.
1990-இல் இப்போது நான் வசிக்கும் சுங்கைப் பட்டாணிக்கு வந்து 
விட்டேன். 
சுங்கைப்பட்டாணிக்கு மிக அருகில்தான் புஜாங் இருக்கிறது. ஆகவே 
அடிக்கடி சென்று ஆராய்ந்து வந்தேன். 
நாளடைவில் "கடாரம் என்றாலே அதைப் பற்றி அதிகம் தெரிந்த 
ஆள் ஜேய்பிதான்" என்ற அளவுக்குப் பெயர் வாங்கினேன்.
2000-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசின் சார்பாக இந்த வட்டாரத்திற்கு 
வந்த இந்தியர்களைப் பற்றி ஒரு டாக்குமெண்டரியை செய்வதற்காக 
ஒரு டீம் வந்தது. அந்த டீமுக்குத் தலைவி பெரெய்ரா என்னும் கோவாக்காரப் 
பெண்.
மியூஸியத்துக்குப் போனோம். அங்கு பல வீடியோ ஷ¥ட்டிங் 
செய்தார்கள்.  
அங்குள்ள எக்ஸிபிட்களைக் காட்டிக்கொண்டிருந்தபோது மணிக்கற்கள் 
இருந்த பகுதியையும் காட்டினேன். 
அந்த நீலக்கல்லைப் பற்றிச் சொன்னேன். அவை தமிழ் நாட்டில் 
மட்டும்தான் கிடைக்கும். இந்தக் கற்கள் அங்கிருந்துதான் வந்தன. 
யவனர்கள் இந்தக் கற்களை அதிக விரும்பினர். யார் கடாரத்துக்குக் 
கொண்டு வந்திருப்பார்கள் என்பது தெரியவில்லை", என்றேன்.
அந்தப் பெண் அந்தக் கற்களையே உற்று நோக்கிக்கொண்டிருந்தார் 
ஒரு மாதிரி வெறித்த பார்வை.
அப்போது சொன்னார், "நான் இதே கற்களைத் தமிழகத்தில் 
அரிக்கமேட்டில் பார்த்திருக்கிறேன்", என்றார்.
அரிக்கமேட்டில் அகழ்வாராய்ச்சிகள் ரொம்ப காலமாகச் செய்து
கொண்டிருந்தார்கள். அங்கு ரோமன் குடியிருப்புகள் இருந்தன. அந்த 
இடத்திலும் இதே மாதிரி நீலமணிகள் இருந்தன. 
யவனர்கள் நீலமலையிலிருந்து அந்த மணிக் கற்களை வாங்கி 
வந்திருக்கிறார்கள். 
அதே நீலமணிக் கற்கள் கடாரத்திலும் புஜாங் மியூஸீயத்தில் வைக்கப்
பட்டிருந்தன.
சோமுவின் வெண்ணிலவுப் பெண்ணரசியில் நான் படித்த அந்த 
நீலமலை- குருந்தங்கல் விஷயம் மனதில் ஒட்டிக்கொண்டது என்னுடைய 
கடார ஆராய்ச்சிக்கும் மிஸ் பெரெய்ராவின் டாக்குமெண்டரிக்கும் மிகவும் 
உதவியாக இருந்தது.
நீலமலை - அரிக்கமேடு - கடாரம் கனெக்ஷன் எஸ்டாப்லிஷ் 
ஆகி உறுதியாகியது.

அன்புடன்

ஜெயபாரதி


குருந்தம் என்பது அலுமினியம் ஆக்சைடின் (Al2O3) அடர்ந்த படிவமாகும். (இதைக் குருவிந்தம் என்றுந் தமிழிற் சொல்வதுண்டு.) இந்தப் படிவம் தமிழ்நாட்டில் ஏர்க்காட்டிற்கு அருகில் சேர்வராயன் மலையிலும், நாமக்கல்லிற்கு அருகில் கொல்லிமலையிலும், திண்டுக்கல்லுக்கு அருகில் கொடைக்கானல் மலையிலும் இருக்கும் பாக்சைட் என்னும் அலுமினிய மூலப்பொருளின் ஊடே கிடைக்கிறது. இந்தப் படிவத்தின் ஊடே இருக்கும் மாசைப் பொறுத்து குருந்தக்கல்லின் நிறம் மாறும்.
 
இதில் குரோமிய (chromium) மாசு இருந்தால் சிவப்பும் செந்நீலமும் என நிறங்கொள்ளும். சிவப்பு நிற குருந்தக் கல்லைத்தான் ஆங்கிலத்தில் ரூபி (Ruby) என்று சொல்கிறார்கள். தமிழில் மாணிக்கம் என்று சொல்கிறோம். (கண்ணகியின் சிலம்புள் மாணிக்கப் பரல்களே இருந்தன. பாண்டிமாதேவியின் சிலம்புள் முத்துப் பரல்கள் இருந்தன.)
 
இதில் இரும்பு மாசு இருந்தால் நீல நிறம் கொள்ளும். அதை சவையர் (sapphire) என்பார்கள்.
 
இதில் தைத்தானியம் (Titanium) இருந்தால் மஞ்சள் நிறங்கொள்ளும்.
 
செம்பு இருந்தால் ஆரஞ்சு நிறங்கொள்ளும்.
 
மக்னீசியம் (Magnesium) இருந்தால் சற்று பசியநிறங் காட்டும்.
 
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் நொய்யலாற்றின் வடகரையின் அருகில் கொடுமணலில் (சங்க காலத்திற் கொடுமணம் என்று பெயர்)  மணிகளைப் பட்டைத்தீட்டும் தொழிலும், மெருகு கொடுக்கும் தொழிலும் நடந்திருப்பது பேரா. கா.இராசனின் அகழாய்வாற் தெரியவந்திருக்கிறது. எனவே யவனர் - தமிழர் பரிமாற்றத்தில் கொடுமணமும் ஊடே வந்திருக்கலாம்.
 
குருந்தம்/குருவிந்தம் என்ற சொல் அதனுடைய கனமான தன்மையாலும், ஒளிபெறுந் தன்மையாலும் ஏற்பட்டிருக்கவே வாய்ப்புண்டு. (பசுமட் குரூஉத் திரள் போல” புறநா.32).
 
Because of corundum's hardness (pure corundum is defined to have 9.0 Mohs), it can scratch almost every other mineral. It is commonly used as an abrasive on everything from sandpaper to large machines used in machining metals, plastics, and wood. Some emery is a mix of corundum and other substances, and the mix is less abrasive, with an average Mohs hardness of 8.0.
 
In addition to its hardness, corundum is unusual for its density of 4.02 g/cm3, which is very high for a transparent mineral composed of the low atomic mass elements aluminium and oxygen.
 
என்று ஆங்கில விக்கிப்பீடியா சொல்லும்.
 
குருந்தம்.குருவிந்தம் பற்றிய ஆய்வை வரலாற்றுத் தொடர்போடு சீராக ஆய்வு செய்தவர் நானறிய யாருமில்லை. எதிர்காலத்தில் யாராவது செய்தாற் பயனுண்டு. 
அன்புடன்,
இராம.கி.