Monday, September 2, 2013

Classical Literature

அன்பர்களே,

இந்த உலகிலேயே மிக அதிகமான Classical Literature - பாடல்கள்,
பெருங்காப்பியங்கள், சிறு காப்பியங்கள், பிரபந்தங்கள், தனிப்பாடல்கள்
போன்றவை மிக அதிகமாக உள்ள மொழிகளில் தமிழ், முதல் இரண்டு மூன்று ஸ்தானங்களுக்குள்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
ஸமஸ்கிருதத்திலும் ஏராளமாக இருக்கின்றன என்பதுவும் அறிந்த
விஷயம்தான்.
கந்தபுராணத்தில் மட்டுமே ஓர் இலட்சத்து இருபதினாயிரம் கிரந்தங்கள், மஹாபாரதத்தில் ஓர் இலட்சம் கிரந்தங்கள், வால்மீகி ராமாயணத்தில் இருபத்து நான்காயிரம் என்று ஏராளமாக இருக்கின்றன.
தமிழை எடுத்துக்கொள்வோம்.
இதுவரை அறியப்பட்ட பாடல்கள் மட்டுமே பல லட்சங்கள் இருக்கும்போல தோன்றுகிறது. மறைந்து போனவை, அழிந்துபோனவை, அழிக்கப்பட்டவை போன்ற பாடல்களும் லட்சக்கணக்கில் இருக்கவேண்டும்.
முதற் சங்கம், இரண்டாம் சங்கம் ஆகியவற்றில் தொல்காப்பியத்தைத் தவிர மற்ற நூல்கள் கிடைக்கவில்லை. முத்தமிழில் நாடகத் தமிழ் சம்பந்தமான நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
சில பாடல்களின் பகுதிகள் வேறு நூல்களில் குறிப்புகளாகவும் எடுத்துக்காட்டுக்களாகவும் காணப்படும். அவற்றில் முழுநூல்கள் இல்லை. சில நூல்கள் வழிநூல்களாக இருக்கும். இப்போது வில்லிப்புத்தூரார் இயற்றிய வில்லி பாரதம் இருக்கிறது. ஆனால் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றிய மாபாரதம் கிடைக்கவில்லை. பாரதம் பாடிய பெருந்தேவனார்களே அதே பெயரில் இரண்டு பேர்
இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சங்க காலத்தைச் சேர்ந்தவர். இருவருடைய பாரதமும் இப்போது இல்லை.
பிற்காலத்தில்கூட பல புலவர்கள் - ஆதரிப்பற்றோர் அருகிவிட்ட
நிலையிலும்கூட - நிறைய எழுதியிருக்கிறார்கள்.
பிற்காலத்திலும்கூட இயற்றப்பட்ட பல நூல்கள்/பாடல்கள் மறைந்துதான் போய்விட்டிருக்கின்
றன.
எத்தனையோ புலவர்கள் இயற்றிய நூல்களின் பெயர்கள் கிடைக்கின்றன. நூல்கள் இல்லை. தனிப்பாடல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
புலவர் ஒருவர் - நல்ல பிள்ளை என்ற பெயர். பிள்ளை என்பது ஜாதிப்
பட்டமாக இருக்கலாம். நல்லாப்பிள்ளை என்பவர் இன்னொருவர்.
நல்ல பிள்ளையவர்கள் இயற்றிய நூல்கள் -

1. வருமுருகாற்றுப்படை
2. சுருக்கத் திருமுருகாற்றுப்படை
3. அணிமுருகாற்றுப்படை
4. நன்முருகாற்றுப்படை
5. சத்தகோடி மகாமந்திரத் திருப்புகழ்
6. சிவசுப்பிரமணியர் கவசம்
7. பழனி இடும்பேசர் துதி
8. சிறை வீடு அந்தாதி

முருகாற்றுப் படையிலேயே நான்கு ஆற்றுப்படைகள், கவசத்தில் ஒன்று, திருப்புகழில் ஒன்று, துதியில் ஒன்று, அந்தாதியில் ஒன்று.
'சத்தகோடி மகாமந்திரத் திருப்புகழ்' சிந்தனையைத் தூண்டுகின்றது.
முருகனுக்கு உரியவை எழுகோடி மந்திரங்கள்.

"தரணிதனில் ஆறுபத்தறு கோடி தீர்த்தமுன் சரவணத்துள் அடக்கம்
சாற்றுமொரு எழுகோடி மந்திரங்கள் உந்தன் சடாட்சரத்துள் அடக்கம்..."

இவற்றின் பெயரால் ஒரு திருப்புகழ் என்றால் அது ஓர் அரிய நூலாகத்தான் இருக்கவேண்டும்.
அச்சில் வந்ததா, எங்கும் இன்னும் இருக்கின்றதா....?
எதுவும் தெரியவில்லை.

அன்புடன்

ஜெயபாரதி

No comments:

Post a Comment