உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக!
வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமூகத்துக்கு நாகரீகத்திலும் மேலாதிக்கத்திலும் மேல்நிலை காணப்படுகிறது. பதினேழாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய சமூகம் இன்றுவரை அதற்கு இருக்கும் உயர்பண்பாட்டையும் வணிகமேலாதிக்கத்தையும் அடைந்தது. அதற்கு முன்னர் ரோம சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தை நாம் காண்கிறோம். அதற்கு முன் கிரேக்கர்கள்.
பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இந்தியா பண்பட்டிலும் செல்வத்திலும் ஓங்கியிருந்த ஒரு நாடு என நாம் அறிவோம். உலகமே இந்தியாவை கல்விக்காகவும் வணிகத்துக்காகவும் தேடிவந்த ஒருகாலகட்டம் இருந்தது. இந்தியா என்பது ஒரு பொற்கனவாக உலகமனத்தில் இருந்தது.
இந்த முதன்மை எப்படி ஏற்படுகிறது? வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லக்கூடிய காரணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையானவை. தத்துவமென்பது கடைசி எல்லை வரை குறுக்கிச் சாராம்சப்படுத்தி நோக்கும்தன்மை கொண்டதாகையால் எங்கும் செல்லுபடியாகக்கூடிய ஒரு பொதுக்காரணம் இருக்குமா என்று நாம் ஆராயலாம்.
ஐரோப்பிய மேலாதிக்கத்தின் காரணம் என்று முதல்பார்வைக்குத் தோன்றுவது அவர்கள் இயந்திரவியலில் பெற்ற வெற்றிதான். துப்பாக்கிகள், கப்பல்கள் போன்ற கருவிகள் அவர்களுக்கு ராணுவ முதன்மையை அளித்தன. இயந்திரங்கள் மூலம் உற்பத்திசெய்ய ஆரம்பித்தபோது அவர்கள் பெருமளவிலான ஆலை உற்பத்தியை உருவாக்கிக் கொண்டார்கள். தொழிற்சாலை உற்பத்தி முறைமூலம் அவர்கள் அன்றுவரை கொண்டிருந்த நிலபிரபுத்துவமுறை இல்லாமலாகியது. சமூகம் முதலாளித்துவக் கட்டமைப்புக்கு மறுஆக்கம் செய்யப்பட்டபோது மேலும் அதிக மக்கள் உழைப்புக்கு வந்து சேர்ந்தார்கள். திட்டமிட்ட ஒருங்கிணைந்த உழைப்பும் அதை முறையாக குவிப்பதும் ஆரம்பமாகியது. ஆகவே அவர்களிடம் மூலதனம் சேர்ந்தது.
இன்னும் நுட்பமாகப் பார்த்தால் இயந்திரவியலின் தர்க்கமுறை அவர்கள் சிந்தனைகளை வடிவமைக்க ஆரம்பித்ததையும் அந்த இயந்திரவியல்நோக்கு அவர்களை வலிமைகொண்டவர்களாக ஆக்கியதையும் காணலாம். ராணுவங்களை பிசிறில்லாத இயந்திரங்களாக அமைத்துக்கொண்டார்கள். நிர்வாக இயந்திரம் என்று நாம் இன்று சொல்லும் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு சமூக அமைப்புகளை துல்லியமாக செயல்படச்செய்தார்கள். நீதி,பொதுநிர்வாகம்,நிதிமேலாண்மை போன்றவற்றில் அவர்கள் உருவாக்கிய இயந்திரத்தன்மைகொண்ட அமைப்புகள் திறன்வாய்ந்த அரசமைப்புகளை அவர்களுக்கு உருவாக்கி அளித்தன.
இன்னும் ஆழமாகச் சென்றால் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் மாபெரும் இயந்திரங்களாக அவர்கள் உருவகித்துக்கொண்டமை அவர்களை அவற்றை தயக்கமில்லாமல் முழுமையாக தங்கள் சுயநலநோக்குக்குப் பயன்படுத்திக்கொள்ளச் செய்தது. பூமியை கண்டடைவதிலும் அதை வெல்வதிலும் அவர்களுக்கு திறமையை உருவாக்கியது அந்த அணுகுமுறையே. பூமியும் கடலும் வானமும் அவர்களுக்கு தாங்கல் பயன்படுத்திக்கொள்வதற்குரிய இயந்திரங்களாகவே பொருள்பட்டன.
விளைநிலத்தை அன்னையாகவோ தெய்வமாகவோ எண்ணுபவனை விட அதை இடுபொருட்களையும் உழைப்பையும் விளைச்சலாக மாற்றித்தரும் ஒர் இயந்திரம் என்று எண்ணும் ஐரோப்பியன் அதிலிருந்து அதிக லாபம் பெறுகிறான். லாபத்துக்காக அதை மெல்லமெல்ல அழிக்கிறான். இன்றைய நவீன வேளாண்மை, தோட்டத்தொழில், மீன்பிடித்தொழில் போன்றவை ஐரோப்பிய இயந்திரவாத நோக்கால் உருவாக்கப்பட்டவையே. உலகத்தையே ஒருகட்டத்தில் ஐரோப்பா உண்ண ஆரம்பித்தது.
தத்துவத்திலும் அறிவியலிலும் அவர்கள் அடைந்த இயந்திரவாத நோக்கு டார்வினியம்,மார்க்ஸியம்,·ப்ராய்டியம் போன்ற சிந்தனைகளை உருவாக்கியது. மனிதர்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்ப்பதிலும் ஆராய்வதிலும் புதிய வழிகளை அவர்களுக்கு உருவாக்கியளித்தது. அலோபதி மருத்துவமும் சரி, நவீன பள்ளிக்கல்வி முறையும் சரி , அதன் விளைவே. ஒவ்வொன்றையும் பகுத்தும் தொகுத்தும் நோக்கும் ஐரோப்பிய அறிவுக்கூறியல் அவ்வாறு உருவானதே. அது அங்கே ஓர் அறிவுக்கொந்தளிப்புக்குக் காரணமாகியது.இன்றுவரை மேலாதிக்கம் செலுத்தும் நவீன அறிவியலை அதுவே உருவாக்கியது.
ஆக,நாம் ஐரோப்பாவின் எழுச்சிக்குப் பின்னால் காண்பது இயந்திரவாத நோக்கு என்ற கருத்தை. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ·ப்ரான்ஸிஸ் பேக்கனை இதன் பிதா என்று கூறுவது வழக்கம். ஆனால் அந்நோக்கு ஐரோப்பாவில் பற்பல சிந்தனையாளர்களால் மெல்ல மெல்ல உருவாக்கி எடுக்கப்பட்ட ஒன்றே.
இயந்திரவாதநோக்கு என்பதை ஒரு மாபெரும் மானுடத்தரிசனமாகக் கொள்ள முடியும். அந்த தரிசனம் ஒரு காலத்தருணத்தில் மனிதமனத்துக்கு வாய்த்தது. இயற்கை மேல் மனிதனுக்கு ஆதிக்கத்தை உருவாக்கியது. அதன்மூலம் இய்றகையுடனான மனிதனின் நடபார்ந்த உறவு இல்லாமலாகியது. மானுட ஆற்றல் என்பதை ஒரு பெரும்நீர்நிலை என்று சொன்னோமென்றால் இத்தகைய தரிசனங்கள் அதில் விழும் உடைப்புகள் போல. மொத்த மானுட அகஆற்றலும் அந்த வழியினூடாகப் பீரிடுகிறது.
ஆகவே ஒரு சமூகம் கொள்ளும் முதன்மை அச்சமூகம் அடைந்த ஒரு தரிசனத்தின் வலிமையினாலேயே உருவாகிறது என்று சொல்லலாம். பிற அனைத்துமே அதன் விரிவாக்கங்கள்தான்.
அப்படியானால் தொன்மையான இந்திய சமூகத்த்தை உருவாக்கிய மையத்தரிசனம் யாது? அப்படி ஒரு தரிசனத்தைச் சொல்ல முடியுமா என்ன?
தொன்மையான இந்திய சமூகத்தின் விளைச்சல்களாக நாம் இன்று காண்பவை மாபெரும் ஞானநூல்கள். பேரிலக்கியங்கள். பெரும் கலைப்படைப்புகள். இவற்றின் வழியாக நாம் காணும் அச்சமூகத்தை வரலாற்றுத்தகவல்களின் வழியாக நாம் ஊகித்து விரிவுபடுத்திகொள்கிறோம்.
நம்முடைய ஞானநூல்கள் அனைத்திலும் உள்ள பொதுவான அம்சம் என்ன? இந்திய ஞானமரபின் தொடக்கம் என்றால் அது ரிக்வேதமே. ரிக்வேதத்தை ஒரு மாபெரும் தொகைநூல் என்றே சொல்லவேண்டும். பலவகைப்பட்ட இனக்குழுச்சடங்குகளும் நம்பிக்கைகளும் விரவிவரக்கூடிய ஒரு கதம்பம். மெய்யியல் அடிப்படையில் நோக்கினால்கூட ரிக்வேதம் பல்வேறு தரப்புகளின் உரையாடலால் ஆனது.
ஒட்டுமொத்தமாக ரிக்வேதத்தின் ஞானத்தரப்புகளை ஞானகாண்டம்-கர்ம காண்டம் என்று பிரித்திருக்கிறார்கள். வேள்விகள் சடங்குகள் ஆசாரங்களை முன்னிறுத்துவது கர்மகாண்டம். தூய அறிவின் தேடலை மட்டுமே முன்னிறுத்துவது ஞானகாண்டம். இவ்விரு சரடுகளும் இந்திய ஞானமரபின் எல்லா காலகட்டங்களிலும் நீண்டன. இந்திய ஞானமரபின் எல்லா பிரிவுகளிலும் இந்த அடிப்படையிலான பெரும் உள்விவாதம் நடந்துள்ளது என்பதைக் காணலாம். ஒரு கோணத்தில் ஹீனயான பௌத்தத்துக்கும் மஹாயான பௌத்தத்துக்கும் இடையேயான முரண்பாடே இதுதான்.
வேதங்களின் ஞானகாண்டத்தின் நீட்சியாக வேதாந்த காலகட்டம் அல்லது உபநிடதங்களின் காலகட்டம். அதன்பின்னர் ஆறுதரிசனங்களின் காலகட்டம். அதன்பின்னர் ஆசீவகம்,சமணம்,பௌத்தம் என அவைதீக மதங்களின் காலகட்டம். பின்னர் பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம். இந்தக் காலகட்டங்கள் அனைத்திலும் நாம் காண்பது மிக விரிவான உள்விவாதங்களைத்தான்.
உபநிடதங்களில் மிகத்தீவிரமான வேதமறுப்பைக் கொண்டவை உள்ளன. வேதங்களை முதற்சொல்லாக ஏற்றுக்கொண்டவை பல உள்ளன.லாஅறுதரிசனங்களில் பௌதீகவாத அடிப்படை கொண்டவை உள்ளன. தூய அறிவையே முதல்முழுமை என்று சொல்லும் வேதாந்தமும் முழுமுதற்சொல்வாதம் [சுருதிவாதம்] பேசும் பூர்வமீமாம்சமும் உள்ளன.
பௌத்த சமண மதங்களின் உள்விவாதங்களுக்கு மிகப்பிரம்மாண்டமான விரிவு காணப்படுகிறது. தூயதர்க்கத்தை முன்வைக்கும் யோகாசார பௌத்தம் முதல் சடங்குமதமான வஜ்ராயன பௌத்தம் வரை அதன் தரப்புகள் எண்ணற்றவை. பிற்கால வேதாந்தங்களின் உள்விவாதங்கள் மூன்று நூற்றாண்டுக்காலம் நம் மரபில் நீடித்தவை.
இத்தனை உள்விரிவை நாம் நம்முடைய சைவ, வைணவ,சாக்தேயப் பெருமதங்களின் உள்ளேயும் காணமுடிகிறது. அவை ஒவ்வொன்றுக்குள்ளும் ஏராளமான தனிவழிபாட்டுமுறைகள் அடங்கியிருக்கின்றன. சிவகாமசுந்தரனை வழிபடும் தென்னகச் சைவத்துக்கும் மயான ருத்ரனை வழிபடும் அஹோர சைவத்துக்கும் இடையே உள்ள தொலைவு பிரம்மாண்டமானது.
இந்த உள்விரிவையே நம்முடைய பேரிலக்கியங்களும் காட்டி நிற்கின்றன. மாறுபட்ட தரப்புகள் ஒரே பேசுதளத்துக்கு வ்ந்தவை போல இருக்கின்றன நம்முடைய பேரிலக்கியங்கள். ஸௌனகனின் நாத்திகவாதமும் கீதையின் ஞானவாதமும் விதுரனின் தர்மவாதமும் பீஷ்மரின் ராஜநீதிவாதமும் ஒன்றாகச்சேரும் ஒரு பெருவெளி என மகாபாரதத்தைச் சொல்லலாம். ஒற்றைக்குரலில் பேசும் பேரிலக்கிய ஆக்கமே நம் மரபில் இல்லை. விஷ்ணுபுராணம் ,ஸ்காந்தம் போன்ற பெருந்தெய்வவழிபாட்டு நோக்கமுள்ள புராணங்கள்கூட ஒற்றைப்படையானவை அல்ல. உதாரணமாக ஸ்காந்தம் குமரக்கடவுளைப் பற்றியது. ஆனால் அது சூரபதுமனின் பெருமையைச் சொல்லும் வரலாறும்கூடத்தான்.
இந்த மாபெரும் பன்மைத்தன்மை எப்படி வந்தது? இந்தியா என்னும் இந்த வளம்மிக்கப் பெருநிலத்தின் வாழ்க்கைவிரிவே அதற்குக் காரணம். பல்வேறு இன மக்களும் வரலாற்றுக்காலத்துக்கு முன்னரே தோன்றி பரவி வளர்ந்து தங்களுடைய வாழ்க்கைப் பார்வைகளையும், வழிபாடுகளையும், ஆசாரங்களையும் உருவாக்கிக்கொண்டுவிட்ட நிலம் இது. நமக்குக் கிடைக்கும் முதல் தொல்பிரதி ரிக்வேதம்தான். அப்போதே தனித்துவம் கொண்ட வாழ்க்கைமுறையும் வழிபாட்டுமுறையும் சிந்தனைமுறையும் கொண்ட பல்வேறு குடிமைச்சமூகங்கள் உருவாகி விட்டிருந்ததை ர்க்வேதசூக்தங்கள் வழியாகவே அறியமுடிகிறது.
ஆகவே நம்முடைய பண்பாடு என்பது அச்சமூகங்களுக்கு இடையேயான தொடர்ச்சியான உரையாடல் வழியாக உருவானதாகும். ஆகவேதான் ஒற்றைக்குரல் ஒற்றைமையம் என்ற கருத்ததிகாரம் என்றுமே சிந்தனைத்தளத்தில் இங்கே இருந்ததில்லை. காரணம் அப்படிப்பட்ட ஒரு ஒற்றைச்சட்டகத்துக்கு இங்கே வேலையில்லை. பல்வேறு தரப்புகளுக்கு இடையோயான உரையாடலே ரிக்வேதம் முதல் உபநிடங்கள் , தரிசன நூல்கள் அனைத்திலும் காணப்படுகிறது.
இந்துஞானமரபு என்று நாம் இன்று சொல்லும் இந்தப்பாரம்பரியம் என்பது மூவாயிரம்வருடம் தொடர்ச்சியாக வளர்ந்த அந்த உரையாடலின் விளைவே. அந்த உரையாடலின் வழியாக உருவான ஒத்திசைவே இந்திய சமூகத்தை உருவாக்கியது. இந்திய சமூக உருவாக்கம் என்பது ஒரு பிரம்மாண்டமான தொகுப்புச்செயல், ஓர் இணைப்புப்பணி, ஒரு சமரசநிகழ்வு.
இந்த இயல்பின் காரணமாகவே இந்துஞானமரபில் உள்ள எல்லா மதங்களுக்கும் மிக நெகிழ்வான கட்டமைப்பு உருவாயிற்று. அனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மை அவற்றுக்கு வந்தது. இப்படி தழுவி உள்ளிழுக்கும் போக்கின் வழியாகவே அவை தங்கள் உள் முரண்பாடுகளை தீர்த்துக்கொண்டன. எதிர்ப்புகளை எதிர்கொண்டு வளர்ந்தன.
இந்த இயல்பு ஸமன்வயம் என்றும் ஸம்யக்திருஷ்டி என்றும் சொல்லப்பட்டது. பண்டைய இந்திய வரலற்றை ஆராய்ந்த அறிஞர்கள் அனைவருமே இந்த அம்சத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். டாக்டர் ராதாகிருஷ்ணன் சொல்கிறார் ”வேதமதம் பழைய ஆசார சம்பிரதாயங்களையும் வழிபாட்டுமுறைகளையும் ஏற்றுக்கொண்டு தன்னதாக்கிக்கொண்டு வளர்ந்தது. அவற்றை அழித்தொழித்துவிடுவதற்குப் பதிலாக தன்னுடைய தத்துவத்தேவைக்கு ஏற்ப மறு ஆக்கம்செய்துகொண்டது. திராவிடப்பண்பாட்டிலிருந்தும் புஆதன பழங்குடிப்பண்பாட்டிலிருந்தும் அது ஏற்றுக்கொண்ட ஏராளமான பண்பாட்டுக்கூறுகளின் காரணமாக வேதமதத்தில் பூர்வீக ஆரியக் கூறுகள் எவை என்று கண்டுபிடிப்பதே சிரமமானதாக ஆகிவிட்டது” [ Dr.S.Rathakirshnan Eastern Religions and western thought]
ஆரம்பகால இந்தியவியல் ஆய்வாளரான கோர்டான் சைல்ட் இவ்வாறு சொல்கிறார் ” ஒரு குறிப்பிட்ட நிலச்சூழலுடன் மனிதவாழ்க்கை தன்னை எப்படி முழுமையாக இணக்கிக்கொள்ளமுடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக வேதகால நாகரீகத்தைச் சொல்லலாம். நெடுங்காலம் நீண்டுநின்ற பொறுமைமிக்க உரையாடலும் புரிந்துகொள்ளும் முயற்சியும் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது. அது நெடுங்காலம் நீடித்திருக்கவும்செய்தது. இந்தச்சிறப்புத்தன்மை இதற்குள் ஒரு இந்தியக் குணமாகவே ஆகிவிட்டிருக்கிறது. நவீன இந்தியப்பண்பாட்டின் அடித்தளமாக அமைந்ததும் அதுவே” [Gordon Childe . New light on the Most Ancient Eeast ]
சுதந்திரப்போராட்ட காலத்துக்குபின்னர் எழுத ஆரம்பித்த இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் இந்தியப்பண்பாட்டின் இந்த அம்சத்தை ஒரு எதிர்மறை அம்சமாகவே சித்தரித்து அதை ஒருசாரார் ஏற்கும்படியும் செய்திருக்கிறார்கள். அவர்களின் அரசியல்நோக்கம் இந்திய சமூகத்தில் முரண்பாடுகளை வளர்த்து சமூகப்போராட்டங்களை உருவாக்குவதே. இறுகிப்போன சமூகஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்ப்பதற்கு அந்த வழிமுறை தேவையானதாகவும் இருந்திருக்கலாம். ஆகவே எல்லாவற்றையும் ஆரத்தழுவி உண்டு தன் உடலாக ஆக்கிவிடும் பெரும்பூதமாக இந்துமரபு அவர்களால் சித்தரிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் அவர்கள் முன்பாக ஒரு பெரும் வரலாற்று உண்மை நின்றிருந்தது. மாற்றுத்தரப்புகளை விவாதம் மூலம் உள்ளிழுத்துக்கொள்ளும் திறந்த இயல்புமூலமே இந்த நிலத்தில் மதமோதல்கள் வன்முறையையும் அழித்தொழிப்புத்தன்மையையும் தவிர்த்தன. இந்திய நிலப்பகுதியின் மூன்றாயிரம் வருடத்து வரலாற்றில் மேலைநாட்டில் நிகழ்ந்ததுபோன்ற பெரும் மதப்போர்களை நாம் பார்க்கமுடியாது. ஐந்துக்கும் மேற்பட்ட மதங்கள் உதயமான இம்மண்ணில் மத்தியக்கிழக்கு மண்ணில் நிகழ்ந்தது போல மதப்போர்கள் நிகழ்ந்திருந்தால் என்ன எஞ்சியிருக்கும்?
இந்த அப்பட்டமான உண்மையை மழுப்பும்பொருட்டு இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் தடுக்கிலும் பின்னர் கோலத்திலும் புகுந்து மதப்ப்பூசல்களையும் அழிவுகளையும் கண்டடைய முயல்கிறார்கள். புராதனமான திராவிடப்பண்பாட்டை ஆரியர் போரிட்டு அழித்ததாக ஒரு ஊகத்தைச் சொல்லி அந்த அடிப்படையில் இதிகாசங்களை வலிந்து விளக்க முயல்கிறார்கள். பௌத்தமும் சமணமும் வன்முறைமூலம் அழிக்கப்பட்டதாகச் சொல்லிச் சொல்லியே நிறுவ முயல்கிறார்கள். உண்மையில் அம்முயற்சிகல் பலன்தந்த காலகட்டம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்துக்கு வெளியே வந்தால் வெயில்பட்டு வாடுகிறது அத்தரப்பு.
அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் சில தகவல்களை பலவகையிலும் திரித்து இறந்தகால மதமோதல்களின் ஒரு சித்திரத்தை இவர்கள் உருவாக்க முனகிறார்கள். மதுரையில் எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லப்படும் பொய் ஓர் உதாரணம். சைவ இலக்கியங்களில் சைவத்தவரால் மிகைப்படச் சொல்லப்பட்ட ஒருசெய்தி அது. அதிலும் வாதில் தோற்ற சமணர்தான் அதன்படி தாங்களே கழுவேறுகிறார்கள்.
எண்ணயிரவர் என்பது சமணர்களிடையே உள்ள ஒரு குழுவின்பெயராக இருக்கலாமென்பதும் அப்படி நாலாயிரவர் நூற்றுவர் என்றெல்லாம் முன்பு சமணர்களாக இருந்த வணிகர்குலங்களுக்குப் பெயர்கள் உண்டு என்பதும் எல்லாம் ஆராயத்தக்கவை. முக்கியமாக கல்வியை நெறியாகக் கொண்டதும் திட்டவட்டமான அமைப்புகளும் வரலாற்றுக்குறிப்புகளும் கொண்டதுமான சமண மதத்தில் இதைப்பற்றி ஒரு சிறு தகவல் கூட இல்லை என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
சமணர்கள் தமிழகத்தில் மெல்லமெல்ல தேய்ந்து சிறு எண்ணிக்கையாக ஆனபடியே இன்றுவரை எந்தவிதமான தாக்குதலுக்கும் ஆளான வரலாறே தங்கள் குலநினைவுகளில் இல்லாமல் இருந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆலயங்கள் தமிழகத்தில் பெரும்பாலும் அப்படியேதான் உள்ளன. பாழடைந்து கைவிடப்பட்ட சில ஆலயங்களே சிதைந்துள்ளன அல்லது வேறு தெய்வங்கள் நிறுவப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும்கூட அதிகமும் நாட்டார் சிறுதெய்வங்களே நிறுவப்பட்டுள்ளன, சமணரை அழித்ததாகச் சொல்லப்படும் பெருமதத்து தெய்வங்கள் அல்ல.
அப்படியே வைத்துக்கொண்டாலும்கூட இந்தியப்பெருநிலத்தில் அத்தகைய ஒருசில நிகழ்ச்சிகளைக்கூட நம் இடதுசாரிகளால் சுட்டிக்காட்ட முடிவதில்லை. பௌத்தத்தின் பேரழிவுக்குக் காரணமான அழித்தொழிப்பு நாளந்தா பல்கலை கழகத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பக்தியார் கில்ஜியால்தான் நடத்தப்பட்டது. பக்தி இயக்கம் மூலம் இந்து மதங்கள் பெரும்வளர்ச்சி பெற்றபின் மேலும் ஐந்து நூற்றாண்டுக்காலம் பௌத்தம் வலுவாகவே நீடித்திருக்கிறது என்பது வரலாறு.
மத்தியக்கிழக்கின் ஒற்றைத்தரிசன மதங்கள் பரவிய நிலங்களில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கும்போது இந்தியப்பெருநிலத்தின் வரலாறு பெரும் ஆச்சரியத்தையே அளிக்கிறது. இங்கே பண்பாட்டுக்கலப்பு நடந்துள்ளதே ஒழிய பண்பாட்டு அழிப்பு நிகழவில்லை. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் சிந்துசமவெளி நாகரீகத்தில் இருந்த பண்பாட்டுக்கூறுகள் கூட இன்றும் அழியாமல் நீடிக்கின்றன. இந்தியப்பெருநிலத்தின் தொன்மையான பண்பாட்டுக்கூறுகள் எதுவுமே முற்றாக அழிந்ததில்லை.காரணம் இங்கே நடந்தது கொள்வதும் கொடுப்பதும் அடங்கிய ஒரு பண்பாட்டு உரையாடல்தான்.
ஸ்மன்வயம் என்ற சொல் இங்கே மிகக்கூர்ந்து நோக்கத்தக்கது. நாராயணகுரு அவரது நூல்களில் இந்தசொல்லை மிக விரிவாகப் பயன்படுத்தியிருக்கிறார். இதை ஒருங்கிணைப்பு அல்லது கலப்பு என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஒருங்கிணைக்கப்படும் கூறுகளுக்குள் உண்மையான முழுமையான ஒத்திசைவை உருவாக்குதலும் எந்த ஒரு கூறும் தன் இடத்தையும் தனித்தன்மையையும் இழக்காமலிருக்க கவனம் கொள்ளுதலும் இதன் இயல்பு. ‘தத்வ சமன்வயம்’ என்றே நாராயணகுரு தன் விவாதங்களைக் குறிப்பிடுகிறார். நம் சிந்தனையில் நெடுநாட்களாக நடந்தது இதுவே. பன்மைப்பண்பாடு கொண்ட ஒரு நிலப்பரப்புக்கு மிகச்சிறந்த வழிமுறை இதுமட்டுமே
இந்த பன்மைத்தன்மை, உரையாடல்தன்மை, பண்பாட்டுப் பரிமாற்றம்தான் இந்திய மரபின் வெற்றிக்கும் சிறப்புக்கும் காரணம். கோர்டன் சைல்ட் கூறுவதுபோல இன்றும் தொடரும் இந்தியப் பண்பாட்டின் அடித்தளம் இந்த இயல்பேயாகும்.
ரிக்வேதம் பத்தாம் மண்டலமே இந்தியத்தத்துவ சிந்தனையில் நமக்குக் கிடைக்கும் மிகப்பழைய வடிவம். பத்தாம் மண்டலத்த்தில் ஒருபாடல் இவ்வாறு அறைகூவுகிறது
சமானீ வ ஆஹ¤தி! ஸமானா ஹ்ருதயானீ வ
ஸமானம் அஸ்து வோ மனோ! யதா வா ஸ¤ஸஹாஸதி
[இணைந்து வழிபடுங்கள்! உங்கள் இதயங்கள் இணைக!
உங்கள் மனம் ஒன்றாகுக! ஒன்றாக நலம் பெறுங்கள்!]
24 ஜனவரி 2009 அன்று கும்பகோணம் மூவர்முதலிகள் முற்றத்தின் சா ர்பில் நடந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை. முதல் பகுதி.
2.மறைந்து கிடப்பது என்ன?
சாந்தோக்ய உபநிடதத்தில் ஆருணியாகிய உத்தாலகன் தன் மகன் ஸ்வேதகேதுவுக்குச் சொல்கிறான், மண்ணில் ஓடும் நதிகளெல்லாம் கடலையே அடைகின்றன. மாறுபட்ட சிந்தனைகளும் தரிசனங்களுமெல்லாம் இறுதியில் பிரம்மத்தையே சென்றடைகின்றன.ஐநூறுவருடத்துக்கு மேல் காலப்பழக்கமுள்ள ஏதாவது ஒரு மதத்தில், ஒரு தத்துவசிந்தனைமரபில் இதற்கிணையான ஒரு முழுமைநோக்கு பதிவாகியிருக்கின்றதா? உலகசிந்தனைகளை இன்று நாம் இணையம் மூலம் எளிதாக தொட்டுச்செல்லமுடிகிறது. நீங்களே இதற்கான விடையைத்தேடிக்கொள்ளலாம்.
என் எளிய வாசிப்பில் நான் அபப்டி எதையுமே கண்டதில்லை. மனிதசிந்தனை வெளியில் இந்தியஞானமரபுடன் இணைநோக்கத்தகுதியான சிந்தனைமரபுகள் இரண்டே. தொன்மையான கிரேக்க சிந்தனைமரபு, தொன்மையான சீனச் சிந்தனை மரபு. இரண்டிலும் அறிவார்ந்த அணுகுமுறைக்கும் மாற்றுத்தரப்புடன் உரையாடுவதற்கும் பெரிதும் இடமுள்ளது.
குறிப்பாக கன்பூஷியஸின் தத்துவசிந்தனையில் எல்லா தளத்திலும் அமைதியான சமரசப்போக்குக்கே முக்கியத்துவம் காணப்படுகிறது. ஆனால் எல்லா சிந்தனைகளையும் மெய்யான உண்மையை நோக்கிச் செல்வன என்று சொல்ல அதனால் முடியவில்லை. உண்மை உண்மையல்லாமை என்ற பிரிவினையிலிருந்து கன்பூஷியஸாலேயே தப்ப முடியவில்லை
இந்தியப் பண்பாட்டின் அடிப்படை மனநிலை என்று சாந்தோக்ய உபநிடதத்தின் அந்த நோக்கைச் சுட்டிக்காட்டலாம். ஐந்தாயிரம் வருட மரபில் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த இணைவு- சமரசப் போக்கின் சாரமாக இருக்கும் தரிசனம் என்ன? அதுவே இந்தியப்பாரம்பரியத்தின் வெற்றியையும் சிறப்பையும் உருவாக்கியது.
பின்னோக்கிச் செல்லும்போது நாம் ரிக்வேதத்தையே சென்றடைகிறோம். மானுடசிந்தனை குழவிப்பருவத்தில் இருக்கும் காலகட்டம். மண்ணில் நாம் காணும் இன்றைய மதங்களில் அனேகமாக எதுவுமே தோற்றம்பெறாத காலகட்டம். மனிதசேதனை பிரபஞ்ச ரகசியத்தை நோக்கி சிறகடித்தெழுகிறது. தூய உள்ளுணர்வால் அது அலகிலா வெளியைதுழாவுகிறது. ரிக்வேதத்தில் நாம் காண்பது அந்தத் தேடலையும் தத்தளிப்பையும் தரிசனங்களின் மின்மினிகளையும் மின்னல்களையும்தான்.
‘கஸ்மை தேவாய ஹவிஸ்ஹா விதோம?’ என்று ரிக்வேத ரிஷி வியக்கிறார் [யார் அந்த தேவன்? யாருக்கு நாம் அவியளிக்கிறோம்?] அவனை இந்திரன் என்றும் அக்னி என்றும் உஷை என்றும் சாவித்ரி என்றும் காயத்ரி என்றும் கண்டுகொள்கிறார்கள். அந்தியில் விண்ணைச்சிவக்க வைப்பது. அரணிக்கட்டையால் வேள்விக்குண்டத்தை ஒளிர வைப்பது. விண்ணகங்களைச் சுடர வைப்பது. சொல்லிலும் சிந்தனையிலும் சோதியை நிரப்புவது…
பின் அந்தப்பொதுமையை சென்றடைந்தது மானுடப்பிரக்ஞை.
ஏக ஏவாக்னிர் பஹ¤தா ஸமித்த:
ஏக ஸ¥ர்யோ விஸ்வ மனுப்பிர·பூத:
ஏகைவோஷா ஸர்வமிதம் வி·பாத்யேகம்
வா இதம் விப·பூவ ஸர்வம்!
[பல இடங்களில் எரியும் நெருப்பு ஒன்றே
உலகை ஒளிரச்செய்யும் சூரியன் ஒன்றே
இவ்விடங்களையெல்லாம் சுடரச்செய்யும் புலரியும் ஒன்றே
அந்த ஒன்றே இவையெல்லாம்!]
அங்கிருந்து அதுசென்றடைந்த மாபெரும் ஒருமைத்தரிசனமே உண்மையில் வேதத்தின் உச்சம். அதையே வேதாந்தம் என்றனர் பிறகு. அந்தத் தேடலையும் கண்டடைதலையும் முன்வைத்தது ரிஷி பிரஜாபதி பரமேஷ்டி சிருஷ்டி பற்றிச் சொன்ன ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் என்னும் மகத்தான பாடல்.
*
சிருஷ்டி கீதம்
===========
அப்போது அசத் இருக்கவில்லை
சத்தும் இருக்கவில்லை
உலகம் இருக்கவில்லை
அதற்கப்பால்
வானமும் இருக்கவில்லை
ஒளிந்துகிடந்தது என்ன?
எங்கே?
யாருடைய ஆட்சியில்?
அடியற்ற ஆழமுடையதும்
மகத்தானதுமான நீர்வெளியோ?
மரணமிருந்ததோ
மரணமற்ற நிரந்தரமோ?
அப்போது இரவுபகல்கள் இல்லை
ஒன்றேயான அது
தன் அகச்சக்தியினால்
மூச்சுவிட்டது
அதுவன்றி ஏதுமிருக்கவில்லை
இருட்டால் போர்த்தப்பட்ட வெளி
வேறுபடுத்தலின்மையால்
ஏதுமின்மையாக ஆகிய வெளி
அது நீராக இருந்தது
அதன் பிறப்பு
வெறுமையால் மூடப்பட்டிருந்தது!
தன் முடிவற்ற தவத்தால்
அது சத்தாக ஆகியது
அந்த ஒருமையில்
முதலில் இச்சை பிறந்தது
பின்னர் பீஜம் பிறந்தது
அவ்வாறாக அசத் உருவாயிற்று!
ரிஷிகள்
தங்கள் இதயங்களை சோதித்து
அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர்
அதன் கதிர்கள்
இருளில் பரந்தன
ஆனால் ஒருமையான அது
மேலே உள்ளதா?
அல்லது கீழே உள்ளதா?
அங்கு படைப்புசக்தி உண்டா?
அதன் மகிமைகள் என்ன?
அது முன்னால் உள்ளதா?
அல்லது பின்னால் உள்ளதா?
திட்டவட்டமாக யாரறிவார்?
அதன் மூலக்காரணம் என்ன?
தேவர்களோ
சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!
அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?
யாருக்குத்தெரியும் அது?
அதை யார் உண்டுபண்ணினார்கள்
அல்லது உண்டுபண்ணவில்லை?
ஆகாய வடிவான அதுவே அறியும்
அல்லது
அதுவும் அறியாது!
*
இந்திய தத்துவ சிந்தனையை இந்தப்புள்ளியில் இருந்துதான் விரித்தெடுக்க ஆரம்பிக்கவேண்டும் என்று நான் எண்ணுகிறேன். மாக்ஸ்முல்லர், குந்தர் போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்களையும், கெ.தாமோதரனைப்போன்ற மார்க்ஸிய ஆய்வாளர்களையும் பிரமிக்கச்செய்த, பேரழகுமிக்க கவிதை என்று வியந்து பாராட்டச்செய்த இந்த மகத்தான வரிகளை இந்தியநாகரீகம் கண்டடைந்த உச்சதரிசனத்தின் சாட்சியங்களாக நான் முன்வைப்பேன். இங்கிருந்துதான் எல்லாம் ஆரம்பிக்கின்றன.
அறியவொண்ணாமையின் பிரமிப்பால் மட்டுமே சென்று தீண்டச்சாத்தியமான அந்த ஒன்றை இங்கே பெயர் சுட்டக்கூட கவிஞன் முயலவில்லை. மீண்டும் மீண்டும் பிரமிப்பின் வினாக்களே அதை நோக்கி நீள்கின்றன. ‘வ்யோமன் த்ஸோ அங்க வேத யதி ! வா ந வேத!’ என்று சொல்லிமுடிக்கும் கவித்துவ உச்சத்தில் அப்பிரமிப்பே ஒரு இருப்பாக மாறி தன்னை நிறுவிக்கோண்டுவிடுகிறது.
அந்தப்பிரமிப்புக்கு அளிக்கப்பட்ட ஒலியே ‘பிரம்ம’ என்பது. ‘அம்ம!’ என்ற ஒலிக்கு நிகராதுதான் அது. பெரியது, ஆச்சரியத்துக்குரியது, அச்சம் தருவது என்றெல்லாம் பிரம்மம் என்னும் ஒலி பொருள்கொள்ளப்படுகிறது. என்றாலும் அது எப்போதும் அதையே குறிக்கிறது. அலகிலாதது, அறியமுடியாமை என்ற அறிவை மட்டுமே அளிப்பது, இருப்பது , இருப்பின்மையாலேயே இருப்பை அறிய முடியாதது.
அதைச்சொல்ல நேதி நேதி நேதி என்று அனைத்தையும் மறுக்க வேண்டும். அல்லது ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் என்று அனைத்தையும் ஏற்கவேண்டும். தத்வமசி என்று வெளியே சுட்டவேண்டும் . அஹம்பிரம்மாஸ்மி என்று தன்னைச்சுட்டவேண்டும். முரண்பாடுகள் வழியாக மட்டுமே சொல்லமுடியும் ஒரு முடிவின்மை அது.
பிரம்மம் என்ற தரிசனமே இந்திய ஞானமரபையும் இந்தியப் பண்பாட்டையும் உருவாக்கியது என்று விவேகானந்தர் சொல்கிறார். இந்திய வரலாற்றை முழுக்க இந்த விளக்கம் மூலம் கோர்த்துப்பார்க்க முடியும். இந்து ஞானமரபின் மையமாக இக்கணம் வரை இருந்துவருவது இந்தத் தரிசனமே ஆகும்.
ஒரு புரிதலுக்காக இப்படி யோசிப்போம். பண்டைய இந்திய நிலத்தில் உருவானது மத்தியக்கிழக்கில் மேலும் ஆயிரம் வருடம் கழித்து உருவான ஓரிறைவாதம் [Thieism ] போல ஒன்றாக இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? ஒற்றைப்பேருண்மையாக ஒர் இறை உருவகமும் அதன் குறியீடுகளும் அக்குறியீடுகளை உருவாக்கிய பண்பாடும் முன்வைக்கப்பட்டிருக்கும். அந்த ஓரிறைவாதத்துடன் மாறுபடும் தரப்புகள் எல்லாமே பொய்களாகவும் பிழைகளாகவும் கருதப்பட்டு கடுமையான கருத்தியல் பிரச்சாரம் மூலமும் ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறை மூலமும் முற்றாகவே துடைத்தழிக்கப்பட்டிருக்கும்.
பெருமைமிக்க மெசபடோமிய,பாரசீக, அபிஸீனிய, காந்தாரப் பண்பாடுகள் எல்லாம் அழிந்து தடமின்றிப் போனதுபோல இந்திய நிலப்பகுதியில் விளைந்த பண்பாடுகள் மறைந்திருக்கும். எகிப்தின் காப்டிக் மக்கள் ஒட்டுமொத்தமாகவே அழிக்கப்பட்டதுபோல இங்குள்ள எத்தனையோ இனக்குழுச்சமூகங்கள் மறைந்திருக்கும். ஐரோப்பியப் பாகன் பண்பாட்டின் கூறுகளை நாம் இன்று தொல்பொருட்தடயங்களில் இருந்து தேடிச்சேகரிப்பது போல இந்தியப் பண்பாட்டின் இன்றும் வாழும் எத்தனையோ கூறுகளை தேடிக்கொண்டிருப்போம்.
ஆனால் ரிக்வேதத்தின் அடிப்படைச் செய்திக்கு நேர்மாறானதும் புராதன பழங்குடிவழிபாட்டுமுறைகளின் பெருந்தொகுப்புமான அதர்வணவேதமும் நால்வேதங்களில் ஒன்றாகவே நீடிக்கிறது இந்தியாவில். இந்த சமரசம் வேதங்களுக்கு உள்ளேயே தொட்ங்கிவிட்டது. வேதங்களின் கர்மகாண்டமும் ஞானகாண்டமும் தங்களுக்குள் கொள்ளும் முரண்பாடுகளையே வேதகாலம் சமரசப்படுத்திக் கொண்டது.
காரணம் பிரம்மம் என்னும் கருதுகோள். பிரபஞ்ச சாரமாக, பிரபஞ்சமேயாக, பிரபஞ்சம் கடந்த பேராற்றலாக ‘அனைத்துமான ஒன்றாக’ ஒறாக இருக்கும் பலவாக’ காண்பதும் காணப்படுவதும் காட்சியுமாக இருக்கும் பிரம்மம் தத்துவசிந்தனையின் ஓர் உச்சப்புள்ளி. இன்றைய நவீன அறிவியல் யுகம் வரை உருவகிக்க்கப்பட்டுள்ள எந்த ஒரு தத்துவ உருவகமும் பிரம்மம் அளவுக்கு விரிவானதும் முழுமையானதுமல்ல.வாதைச் சந்திக்கும்போதெல்லாம் மொழி கவிதையாவதை நம் மூலநூல்களில் காணலாம்.
பிரம்மம் ஒரு பட்டுநூல். அதில் கோர்க்கப்படுகின்றன இந்து ஞானமரபின் எல்லா இறையுருவகங்களும். இந்திய நிலப்பகுதியில் உள்ள எல்லாவழிபாட்டுமுறைகளையும் எல்லா இறைவடிவங்களையும் பிரம்மம் என்ற கருதுகோள் சந்தித்து அதன் வழியாகக் கடந்துச் சென்றது. உபநிடதகாலகட்டம் பிரம்மதரிசனத்தின் உச்சநிலைகள் வெளிப்பட்ட தருணம். உபநிடதங்களில் பிரம்மஞானம் எவற்றில் எல்லாம் கவித்துவ வீரியத்துடன் வெளிப்பட்டிருக்கிறதோ அவையெல்லாம் மகத்தானவையாக ஆயின.
ஈஸ கேன கட பிரஸ்ன
முண்டக மாண்டூக்ய தைத்ரீய:
ஐதரேயம் ச சாந்தோக்யம்
பிருகதாரண்யகம் தத :
என பத்து உபநிடதங்கள் அவற்றில் மையமானவையாக குறிப்பிடப்படுகின்றன. அதர்வ வேதாந்தமான் மாண்டூக்ய உபநிஷதத்தில் அயம் ஆத்மா பிரம்ம [இந்த ஆத்மாவே பிரம்மம்] ரிக்வேதாந்தமாகிய ஐதரேய உபநிடதத்தில் பிரக்ஞானம் பிரம்ம [பிரக்ஞையே பிரம்மம்] யஜுர்வேதாந்தமாகிய பிருஹதாரண்யக உபநிடதத்தில் அஹம்பிரம்மாஸ்மி [நானே பிரம்மம்] சாமவேதாந்தமான சாந்தோக்ய உபநிடதத்தில் ‘தத்வமஸி’ [அதுநீதான்] என்னும் மகாவாக்கியங்கள் நம் மரபில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பல சுயதரிசனங்கள் வழியாக பிரம்மம் என்ற பெரும்பொதுமையைச் சென்றடையும் வாசல்கள் அவை.
இந்தியஞான மரபின் எந்த ஒரு பிரிவும் பிரம்மம் என்னும் தரப்புடன் ஓர் விவாதத்தில் ஈடுபட்டிருப்பதை நாம் காணமுடியும். அதன்வழியாக அதுவும் சட்டென்று ஒரு பெரும்பொதைக்கருத்தை நோக்கி எழுந்திருப்பதை அறியலாம். உதாரணமாக ஆறுவகை தரிசனங்களில் முத்லாவதான சாங்கிய தரிசனம் ஆதி இயற்கை என்னும் கருதுகோளை அடிப்படையாகக் கொண்டது. தொன்மையான நிலவழிபாட்டில் இருந்து எழுந்தது அது. பிரபஞ்சத்தை நான்குவகை பருப்பொருட்களின் கூட்டாக மட்டுமே காணும் உலகாயத நோக்கு கொண்டது.
பிரம்மவாதத்துடன் விவாதித்த சாங்கியம் அதன் ஆதி இயற்கை என்ற கருதுகோளை நம்மைச்சூழ்ந்துள்ள அழியாத பருப்பொருள் என்ற தளத்திலிருந்து விரித்தெடுத்து பிரபஞ்சமளாவிய ஆக்கமும் அழிவும் இல்லாத மாபெரும் பொதுமையாக உருவகித்துக் கொண்டது. கிட்டத்தட்ட பிரம்மம் போல. பிரம்மத்தை பருப்பொருளாக உருவகித்துக் கொள்வதுபோல.
சாங்கியதரிசனத்தின் நீட்சியாக சர்வாஸ்திவாதத்தை [அனைத்திருப்பு வாதம்] வளர்த்தெடுத்த சமணம் அந்தக்கருதுகோளையும் பிரம்மத்தின் அளவுக்கே கொண்டுசெல்வதைக் காணலாம். பிரபஞ்சத்தின் பெருநியதியை தங்கள் இறையுருவகமாகக் கொண்டது பௌத்தம். மகாதர்மம் என்ற அவர்களின் கருதுகோள் மெல்லமெல்ல பிரம்மமேயாக மாறுவதை நான் பௌத்த சிந்தனைகளில் காணமுடிகிறது.
அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்ட பிரம்மம் என்ற கருத்தே நம்முடைய மதங்களை எல்லா தரப்பினருடன் உரையாடவும் தங்களை நோக்கி திருப்புவனவற்றையெல்லாம் உள்ளிழுத்துக்கொள்ளவும் வழிவகுத்தது. இந்த அம்சத்தை மார்க்ஸிய ஆய்வாளரான டி.டி.கோஸாம்பி தனக்கே உரியமுறையில் விளக்கியிருக்கிறார். இந்தியநிலப்பகுதி எங்கும் பரவியிருந்த பல்லாயிரம் தாய்த்தெய்வங்கள் அனைத்தும் ஒன்றாக ஆகி பிரபஞ்சரூபிணியான தாய் என்ற ஒரு பெரும்பொதுமையை நோக்கிச்செல்வதை அவரது இந்திய தாய்தெய்வங்களைப் பற்றிய ஆய்வு காட்டுகிறது [Myth And Reality, தொன்மையும் உண்மையும். டி.டி.கோஸாம்பி]
மூதாதை வழிபாட்டிலிருந்தும் நிலவழிபாட்டிலிருந்தும் உருவான இறைவடிவமான அன்னை என்ற கருத்தானது பிரபஞ்சங்களை ஈன்ற ‘பராசக்தி’ என்ற கருதுகோளாக மாறியது பிரம்மம் என்ற கருதுகோளின் முன்வடிவத்தாலேயே. நம் சமகாலத்திலேயே நோய் காக்கும் அன்னையாக இருந்த கிராமத்து மாரியம்மன்கள் பராசக்தியின் வடிவங்களாக உருமாற்றம் பெறுவதைக் காண்கிறோம். இதை சம்ஸ்கிருதமயமாக்கம் என்றும் மேல்நிலையாக்கம் என்றும் இன்றைய ஆய்வாளர் சிலர் சொல்கிறார்கள். சரியான சொல் ‘தத்துவமயமாக்கம்’ என்பதே. இந்திய தத்துவத்தின் சாரமாக இருக்கும் பிரம்ம உருவகத்தை எந்த ஒரு வழிபாட்டு முறை சந்தித்தாலும் அது முதல்முழுமை [அப்சல்யூட்] என்ற கருத்தை நோக்கி ஈர்க்கப்பட்டுவிடும்.
இந்தியப்பெருமதங்களான சைவத்திலும் வைணவத்திலும் உள்ள இறை உருவகங்கள் நெடுங்காலம் முன்னரே அந்த பிரபஞ்சமளாவிய ப் பேருருவை எடுத்துவிட்டன. அண்டவெளியெனும் அம்பலத்தில் ஆடுபவனாக சிவன் உருக்கொண்டான். பிரபஞ்சரூபனாக அண்டவெளியெனும் பாற்கடலில் பள்ளிகொண்டவனாக விஷ்ணு விரிவுகொண்டார். அந்த பரம்பொருள் தோற்றமே அந்தமதங்களின் சாரமாக உள்ள தத்துவங்களில் பேசப்பட்டது. வைணவத்தின் விசிஷ்டாத்வைதமும் துவைதமும் பிரம்மவாதத்தின் விளக்கங்களே. பிரம்மவாதத்தின் இன்னொருவடிவம் என்றே சைவசித்தாந்தத்தைக் கூறிவிடமுடியும்.
மையத்தில் உள்ள இந்தப்பெருந்தரிசனமே இம்மதங்களை மாபெரும் தொகுப்புசக்திகளாக ஆக்கியது. இந்தியநிலப்பகுதியில் உள்ள பல்வேறு வழிபாடுமுறைகளை வைணவம் எவ்வாறு உள்ளிழுத்துக் கொண்டது என்று ஆய்வாளரான சுவீரா ஜெய்ஸ்வால் அவரது ஆய்வான ‘வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ நூலில் குறிப்பிடுகிறார். விஷ்ணுவின் அவதாரங்கள் மட்டுமல்லாமல் அனுமன்,கருடன்,சக்கரம் போன்றவையும்கூட தனிவழிபாட்டுமுறைகளாகவே இருந்தன. ஸௌரமதம் பிற்காலத்தில் வைணவத்தில் இணைந்தது. அதேபோல சைவத்திலும் பல்வேறு மதங்களின் இணைவு உள்ளது. தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நவகிரஹங்கள் போன்றவையெல்லாம் தனிவழிபாட்டுமுறையாக இருந்தவையே. தனிமதங்களான சாக்தமும் காணபத்யமும் கௌமாரமும் பின்னர் சைவமாக ஆயின.
ஒரு கட்டத்த்தில் சைவமும் வைணவமும் கூட தங்கள் முரண்பாடுகளை மீறி ஒன்றாக இந்துஞானமரபின் சாரமாக விளங்கும் பிரம்மதரிசனமே உதவியது. இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே பிரம்மம் என்னும்போது இங்குள்ள எந்த ஒன்றை வணங்குவதும் பிரம்மத்தையே வணங்குவதாகும் என்னும்போது பிரம்மத்துக்கு அயலாக ஏதும் இருக்க வாய்ப்பில்லை. எந்த ஒரு மதமும் வழிபாடுமுறையும் பிரம்மதத்துவத்தின் வெறுப்புக்கும் நிராகரிப்புக்கும் ஆளாகவேண்டியதில்லை. அதையே ஆருணியாகிய உத்தாலகன் சொல்கிறான். சூழ்ந்துள்ள ஆழியே பிரம்மம். மண்ணில் உள்ள ஒவ்வொரு ஆறும், ஏன் ஒரு இலைத்தளிரிலிலுந்து சொட்டும் நீர்த்துளியும் கடைசியில் கடலையே அடைந்தாக வேண்டும்.
24 ஜனவரி 2009 அன்று கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் கருத்தரங்கில் ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி
3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!
சிலநாட்களுக்கு முன்னர் திருவையாறு ஐயாறப்பன் ஆலயத்தில் சென்றுகோண்டிருந்தபோது வழிபாட்டுணர்வுடன் சென்றுகோண்டிருந்த மக்களைப் பார்த்துவிட்டு மலையாள இலக்கியத்திறனாய்வாளர் கல்பற்றா நாராயணன் என்னிடம் சொன்னார் ”பக்தியில் மட்டும்தான் ஒரு சிறப்பு உள்ளது, அதில் மூழ்கி மூழ்கிச் செல்வதற்கான இடம் இருக்கிறது”நான் சொன்னேன் ”பக்தி என்பது உண்மையில் ஒற்றைப்படையான ஓர் உணர்வே…பக்தியை இந்திய பக்தி இயக்கங்கள்தான் மூழ்கிச்செல்லவேண்டிய கடலாக மாற்றின. பக்தியை முழு வாழ்க்கையளவுக்கே பெரிதாக்கிக் கொண்டன அவை. பக்தியில் வாழ்க்கையின் எல்லா கூறுகளையும் கொண்டுவந்துசேர்த்துக் கொண்டன. நம்முடைய பக்தியில் தத்துவம் இருக்கிறது, இலக்கியமும் இசையும் இருக்கிறது. எல்லா கலைகளும் பக்தியே. சுவையான சமையல், கட்டிடக்கலை ஆகியவையும் பக்தி சார்ந்தவையே. நம்முடைய களியாட்டங்கள் கொண்டாடங்கள் ஆகியவையும் பக்திசார்ந்தவையே. நம் வாழ்க்கையில் பக்தி ஊடுருவாத எந்த வெற்றிடமும் இல்லை என்ற நிலையை உருவாக்கினார்கள் முன்னோர்”
பக்தி என்பது முழுமையான அர்ப்பணிப்பு. பிறிதொன்றிலாத இணைவு. தீவிரத்தின் உச்சங்களில் மட்டுமே வாழ்ந்துகோண்டிருக்கும் இயல்பு. அத்தகைய பக்தி என்பது எப்போதும் ஒற்றைப்படையான ஒரு வேகமாக, எதில் பக்தி இருக்கிறதோ அதையன்றி பிறிதையெல்லாம் நிராகரிக்கும் மூர்க்கம் கொண்டதாக வெளிப்படுவதே இயல்பானது. ஆனால் உச்சகட்ட பக்தி உருவகிக்கப்பட்ட நம் மரபில் பக்திக்கு அத்தகைய முகம் உருவாகவே இல்லை. ஒன்றின்மீதான பக்தி என்னும் நிலையில் அந்த ஒன்றை எல்லாமுமாக ஆக்கிவிடும்போது பக்தி எல்லயில்லாத அன்பாக மாற்றப்பட்டுவிடுகிறது.நம்முடைய முழுமுதன்மை நோக்கின் வெற்றி இதுவே.
சிவ பக்திகொண்ட ஒருவர் சிவனையன்றி பிறிதை எல்லாம் வெறுக்க இயலாது. ஏனென்றால் அவரைப்பொறுத்தவரை சிவனன்றி வேறெதுவும் இப்பிரபஞ்சத்தில் இல்லை. பிரபஞ்சமே ஆடவல்லானின் ஆடல்தோற்றமே. விஷ்ணுவும் பிரம்மாவும் இன்னும் எண்ணிறந்த தெய்வத்தோற்றங்களும் அவன் அலகிலா முகங்களே. அவர் வெறுக்க வேண்டிய எதுவுமே இப்பிரபஞ்சத்தில் இல்லை.
இவ்வாறு பக்தியை விரிவாக்கம் செய்யும்போதுதான் அனைத்து மெய்ஞானங்களையும் அனைத்து கலைகளையும் அதற்குள் கொண்டுவரநேர்கிறது. பக்தி இயக்கம் இந்திய நிலப்பரப்பில் எல்லா பண்பாட்டுக்கூறுகளையும் தன்னுள் இணைத்து ஒன்றுடன் ஒன்று உரையாடச்செய்யும் ஒரு பொதுக்களமாக உருவாக்கம் கோண்டது. நம்முடைய தத்துவமும் இலக்கியமும் இசையும் சிற்பக்கலையும் நாம் இன்று காணும் மாபெரும் விரிவை அடைந்தது பக்தி மூலமே.
பக்தி இயக்கம் இந்தியாவுக்கு வந்த பிற மதங்களிலும் ஆழ்ந்த பாதிப்பை செலுத்தியது. குறிப்பாக பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இந்தியாவுக்கு வந்த இஸ்லாம் துருக்கிய ஆக்ரமிப்பாளர்களின் மதமாகவே இருந்தது. தொடர்ந்த போர்களும் அழிவுகளும் இஸ்லாமின் வரலால் இந்திய நிலப்பகுதியை உலுக்கின. இந்தியாவெங்கும் ஆலயங்கள் அழிக்கப்பட்டன. ஆனால் இது மன்னர்களின் இஸ்லாம். இஸ்லாம் மதத்தின் மையச்செய்தியுடன் இங்கே வந்த மெய்ஞானிகளின் இஸ்லாம் ஒன்று இருந்தது. அது எளிய மக்களின் இஸ்லாம். இறையடியார்களின் இஸ்லாம். அந்த இஸ்லாம் நம் பக்திமரபுடன் உரையாடியது. அதன் விளைவாகவே இங்கே ஸ¥·பி பாரம்பரியம் வேரூன்றியது.
நம் பண்பாட்டின் ஒளிமிக்க முகங்களில் ஒன்றாகிய் ஸ¥·பி மரபில் ‘அனல் ஹக்’ என்னும் ஆப்த வாக்கியம் ஒன்று உள்ளது. அஹம்பிரம்மாஸ்மி என்ற ஆப்த வாக்கியத்தின் மொழியாக்கம்தான் அது. ‘நானே அல்லா’ என்று அது பொருள்படுகிறது. பக்தி வழியாகவே அந்த தரிசனத்தை ஸ¥·பி மரபு எடுத்துக்கொண்டது. எங்கும் எதிலும் அல்லாவே இருக்கும்போது, அல்லா அன்றி பிறிது எதுவுமே பிரபஞ்சத்தில் இல்லையென்ற நிலையில் நானும் அல்லாவே என்று உணரும் பெருநிலையின் சொல்லாட்சி அது.
ஸ¥பிகளும் பாடினார்கள். ஆடினார்கள். கலைகளிலும் இலக்கியத்திலும் எங்கும் அல்லாவைக் கண்டார்கள். அல்லா அன்றி எதையுமே காணாத வாழ்க்கையின் ஒவ்விரு கணமும் தொழுகைநேரமே என்றும் செய்யும் ஒவ்வொன்றும் தொழுகையே என்றும் வாழ்ந்தார்கள். அல்லாவை அப்பனாக அம்மையாக நண்பனாகக் கண்டு கனிந்தார்கள். ஏன், காதலியாகக் கண்டு களிகூரவும்செய்தார்கள். தன் மனதின் மணியாகிய அல்லாவை ‘மனோன்மணியே’ என்றழைத்து குணங்குடி மஸ்தான் சாயபு பாடிய அரிய பாடல்கள் நம் மொழியில் உள்ளன. பக்தியே பிரபஞ்சமளாவிய ஒரு பெருநிலையாக ஆகும் தளம் அது.
அந்தநிலை இஸ்லாமிய மதத்தின் கட்டமைப்புக்குள் மட்டுமே நின்றவர்களால் புரிந்துகொள்ளப்படவில்லை. ஸ¥·பிகள் மத மீறலுக்காக குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கவும் தண்டிக்கவும் பட்டிருக்கிறார்கள். தக்கலை பீரப்பா அப்பா வரை அந்த வரலாற்றை நாம் காணலாம்.. ஏனென்றால் மத்திய ஆசிய மதங்களில் உள்ளது பக்தி அல்ல, விசுவாசமே. கிறித்தவ பிரார்த்தனைகளும் ஆணைகளும் விசுவாசத்தைப் பற்றியே பேசுகின்றன.
ஒன்றுக்காக முழுமையான சமர்ப்பணம் செய்துகொள்வதும் அதற்காக போரிடும் போராளியாக ஆவதுமே விசுவாசம். ஒரு கிறித்தவர் பக்தி என்று சொல்வது என்று சொல்வது எதை? அவரது அடிப்படை மத உருவகங்களான பிதா-சுதநாவி ஆகியவற்றுக்கு விசுவாசமானவனாக தன்னை அறிவித்துக் கொள்வதை. தன் தேவைகளுக்காக அவற்றிடம் பிரார்த்தனை செய்வதை. அதன் பின் அந்தத் தரப்பு அல்லாத பிற அனைத்தையும் முழுமையாக மறுத்து பிற அனைத்தையும் அழிப்பதற்கான போராளியாக ஆவதை. விசுவாசமுள்ள ஒரு கிறிஸ்தவனுக்கு வாழ்க்கை என்பது ஒரு முடிவிலாத மதப்போராட்டமே.
அதி உக்கிரமாக சைவ வைணவ மதங்கள் முன்வைக்கப்பட்டு தீவிரமான பக்தி உருவாக்கப்பட்ட நம்முடைய பக்திகாலகட்டம் பத்தாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ அறுநூறு வருடங்கள் நீண்டுநின்ற ஒன்றாகும். அந்த இயக்கத்தின் ஒட்டுமொத்த விளைவு என்ன என்று பார்த்தால் அறுவகை மதங்களும் தங்களுக்குள் ஓயாது உரையாடி வேற்றுமைகளை இழந்து ஒரே அமைப்பாக ஆயின. ராமலிங்கங்களும் ஹரிஹரபுத்ரர்களும் உருவானார்கள். மதமோதல்கள் மிக மிக அபூர்வமாக, அதுவும் மன்னர்களின் அதிகார வெளிப்பாடாக மட்டுமே காணக்கிடைக்கின்றன. ஆனால் மத்தியக்கிழக்கு மதங்களின் விசுவாசத்தின் வரலாறு நமக்கு நாநூறு வருடங்களாக நீண்ட அவநம்பிக்கை போர் மற்றும் அழித்தொழிப்பின் கதையையே சொல்கிறது.
இந்திய பக்தி இயக்கத்தில் கிறித்தவத்தின் செல்வாக்கு குறித்து ஹாப்கின்ஸ் [ T. J. Hopkins, The Hindu Religious Tradition ]போன்ற ஆரம்பகால கேம்பிரிட்ஜ் வரலாற்றாசிரியர்கள்தான் முதன்முதலில் பேசினார்கள். அவர்கள் இங்கே கண்ட பக்தியை தங்கள் மதத்தின் விசுவாசத்துடன் மேலோட்டமாக ஒப்பிட்டுக் கொண்டார்கள். ஆனால் மிக விரைவிலேயே அந்த கருத்துக்கள் ஆதாரபூர்வமாக பிற்கால ஐரோப்பிய இந்தியவியல் அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டன. இந்திய மதங்களில் கிறித்தவத்தின் செல்வாக்கு என்பது அனேகமாக ஏதுமில்லை என்பதே உண்மை.
அதற்கான புறக்காரணங்கள் பல. கிறித்தவம் தொல்பழங்காலத்தில் இந்தியாவுக்கு வந்தமைக்கான எந்த ஆதாரமும், ஒரு சிறு தடயம்கூட நம் நூல்களில் இல்லை. பழங்காலத்தில் கிறித்தவம் இந்திய நிலப்பகுதியில் எங்கும் ஆட்சி செலுத்தியதாகவும் தகவல் இல்லை. பெரும் வணிகப் போக்குவரத்து நடந்திருந்த அக்காலத்தில் உதிரிகளான கிறித்தவர்கள் சிலர் வந்திருக்கலாம். அதற்கும் புகைமூட்டமான சிலசெய்திகள் மேல் கற்பனையைச் செலுத்தி செய்யப்படும் விரிவாக்கங்களாலேயே வாய்ப்பு உள்ளது.
அப்படி வந்தவர்களின் பங்களிப்பு மிகமிகச் சொற்பமாகவே இருந்திருக்கும். ஏனென்றால் அக்காலத்தில் வணிகம் மூலம் கருத்துப்பரிமாற்றம் என்பது மிகமிகக் குறைவே. அதற்கான காரணங்கள் பல. முக்கியமானது வணிகத்தில் ஈடுபட்டவர்கள் வணிகத்தை அல்லாமல் வேறெதையும் அறியாத தனித்த வணிகச்சாதியினராக இருப்பதே அக்கால வழக்கம் என்பதுதான்.
வரலாற்றுக்காலம்முழுக்க தென்கடற்கரைகளுக்கு யவன தேசத்துடனும் சீன தேசத்துடனும் வணிகத்தொடர்புகள் இருந்திருக்கின்றன.ஆனால் ஒரு ஞானப்பரிமாற்றம் நடந்தமைக்கான எந்தத் தடையமும் நம் சிந்தனைகளில் இல்லை. நம்முடன் நெடுங்காலத் தொடர்பு கொண்டிருந்த இஸ்லாமியர் இங்கே பல சமூகங்களாக குடியேறி நிரந்தரமாக வாழ ஆரம்பித்தபோதுகூட ஞானப்பரிமாற்றம் நிகழவில்லை.
அவ்வுரையாடல் நிகழ்ந்தது துருக்கியப் படையெடுப்புகள் வழியாகந்தான். ஆக்ரமிப்பு வெறி கொண்ட அரசர்களுடன் லட்சக்கணக்கான சாதாரண மக்களும் வந்தார்கள். இங்குள்ள மக்களுடன் உரையாடினார்கள். அவர்களிடம் இஸ்லாமின் ஆன்மீக சாரம் வந்தது. அது இங்குள்ள ஆன்மீகத்தைக் கண்டடைந்தது. நம் ஸ¥·பிக்கள் அனைவருமே மிக எளிமையான மக்களில் இருந்து வந்தவர்கள். படைவீரர்கள் குதிரைக்காரர்கள்…மிக அபூர்வமாகவே மன்னர்குலத்தவர்கள்.
மேலும் பதினாறாம்நூற்றாண்டுக்குப் பின்னர் இங்கே கிறித்தவம் வந்தபோது அது சாம்ராஜ்யக் கனவுகொண்டிருந்த ஐரோப்பிய இனத்தின் மதமாக வந்தது. எந்த விதமான உரையாடல்களுக்கும் அது தயாராக இருக்கவில்லை. கிறித்தவத்தின் எளிமையான பிதா கோட்பாடு பிரம்மம் என்னும் தொன்மையான மாபெரும் தரிசனத்துடன் உரையாட முற்பட்டிருந்தால் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். ஆனால் அபப்டி நடந்தமைக்கான ஆதாரங்களை நாம் நம்முடைய ஜேசுசபை பாதிரியார்களின் குறிப்புகளில் காண முடிவதில்லை. புனித சேவியர் , இரேனியஸ், கால்டுவெல் ,ரிங்கள்தௌபே என நாம் வாசிக்கக் கிடைக்கும் கிறித்தவ ஊழியர்கள் எவரின் குறிப்புகளும் அந்த வகையான உரையாடலும் புரிதலும் நிகழ்ந்தமைக்கான சான்றுகளை அளிக்கவில்லை.
நேர்மாறாக அவர்கள் தங்களின் எளிமையான வாதங்களை மீண்டும் மீண்டும் இங்குள்ள மக்களிடம் முன்வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார்கள். சாமுவேல் மெட்டீர் என்ற மதபோதகர் திருவிதாங்கூர் பற்றி எழுதிய நூலில் இங்குள்ள வழிபாடுகளை அவர் ‘பிசாசு வழிபாடு’ என்றே சொல்கிறார். ‘பிசாசு’க்களை வழிபடுபவர்களிடம் அவர் கிறித்தவக் கருத்துக்களைச் சொல்லும்போது அவர்கள் அளிக்கும் எதிர்வினையை அவர் பதிவுசெய்கிறார்.
அவர் அவர்களின் கோயிலில் புகுந்து சிலைகளை உடைத்தும் அவமரியாதைசெய்தும் அவர்களிடம் ஆவேசமாக பேசும்போது அவர்கள் நிதானமாக அவரிடம் உரையாடுகிறார்கள் என்கிறார் அவர். அச்சிலைகள் எங்கும் உள்ள பரப்பிரம்மத்தின் வடிவங்களே என்றும் சிலையில் உண்மையில் ஒன்றும் இல்லை என்றும் சொல்கிறார்கள். அவர் வழிபடும் தெய்வமும் தாங்கள் வழிபடும் தெய்வமும் ஒரே பரம்பொருளின் வடிவங்களே என்றும் ஆகவே அவர்கள் மதம் மாறவேண்டியதில்லை என்றும் சொல்கிறார்கள். ‘இந்தமக்கள் நம்மை மதிக்கிறார்கள். நம்மை பிரியமாக வரவேற்கிறார்கள் .நாம் சொல்வதை கவனமாகக் கேட்கிறார்கள். ஆனால் நம் கருத்தை மட்டும் ஏற்றுக்கொள்வதே இல்லை” என்று சாமுவேல் மெட்டீர் பதிவுசெய்கிறார். பெரும்பாலான கிறித்தவ மதப்பரப்பாளர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள். இதுதான் உரையாடல் நடந்த விதம்.
கிறித்தவம் முன்வைத்த அடிப்படைக் கருத்துக்கள் எதுவும் இந்ங்கிருந்தவர்களுக்கு புதியனவாகவும் இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்/ பிட்ஸாவை கறிவேப்பிலை போட்டு தாளித்து இத்தாலிக்கே கொண்டுசென்று அறிமுகம்செய்ய முனைவதையே கிறித்தவ போதகர்கள் செய்தார்கள் என்று சொல்லலாம். கிறித்தவ மதக்கட்டுமானத்தின் கருத்தியல் அடிப்படைகள் மூன்று. ஒன்று தீர்க்கதரிசி வரிசை. இரண்டு, பாபம்-பாவமீட்பு என்னும் கருத்து. மூன்று முக்குணம் கொண்ட இறைவன் என்னும் கருத்துருவம். இம்மூன்றுமே சமண மதத்தில் இருந்து யூதர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு கிறித்தவத்துக்கு வந்து சேர்ந்தவை.
ஆசீவக மரபில்தான் நாம் வரலாற்றில் முதன்முறையாக தீர்க்கதரிசிகள் என்னும் வரிசையை காண்கிறோம். 108 தீர்க்கதரிசிகள் இருந்தார்கள். அவர்களில் கடைசி தீர்க்கதரிசியே ஆசீவக மதத்தை உருவாக்கிய மாகதி கோஸாலன். அதே அமைப்பு சமணர்களால் எடுத்தாளப்பட்டது. வர்த்தமானமகாவீரர் கடைசி தீர்த்தங்காரர் ஆனார். தீர்க்கதரிசிகளில் கடைசியானவர் என்ற உருவகம் இவ்வாறு வலிமையாகி தொன்மையான பட்டுச்சாலை வழியாக மத்திய ஆசியாவுக்குச் சென்றது.
சமண மதமே உலக சிந்தனை வரலாற்றில் பாவம் என்பதற்கு முதன்முதலில் அழுத்தம் கொடுத்தது. மானுட பிறப்பே பாவத்தால் ஆனது என்ற கருத்தும் விரதநெறிகள் மூலம் பாவமீட்பு பெற்றாகவேண்டும் என்ற கருத்தும் சமணத்தின் அடிப்படை தரிசனங்கள். சமணத்தில் இருந்து இந்த கடுமையான பாவமீட்பு விரதங்கள் யூத மரபுக்குச் சென்று சோ·பிஸ்டுகள் வழியாக கிறித்தவத்திலும் நீடித்தன. இன்று பெந்தேகொச்தே சபை போன்றவற்றில் உள்ள கடும் நெறிகள் தொன்மையான சமண சமயத்தின் நினைவுகளே
மூன்று தெய்வங்கள் என்ற கருத்து சமண மதத்தில் இருந்து பௌத்தத்துக்குச் சென்றது. தர்மகாயம்- புத்தர் - மகாகாயம் என்ற மூன்று தெய்வ உருவகங்களை அப்படியே பிதா - சுதன் - ஆவி என்ற மூன்று தெய்வங்களாக நாம் காண்கிறோம். இடைய சமூகத்தில் இறைவனை ஆகபெரிய தந்தையாக உருவகித்தனர். அதுவே அவர்களுக்குச் சாத்தியமான ஆகப்பெரிய இறைஉருவகம். பட்டுநூல்பாதை வழியாக வந்த கீழைநாட்டு சமண பௌத்த சிந்தனைகள் அந்த இறையுருவகத்துடன் கலந்தன.
கிறித்தவ மரபில் கிழக்கு மெய்ஞானத்தின் ஊற்றாக காட்ட்டப்படுகிறது. கிழக்கால் அடையாளம் காட்டப்பட்டவர் ஏசு என்னும் மரபு அதையே சுட்டுகிறது. ஏசுவின் வாழ்க்கையில் அறியப்படாத இளமைக்காலம் கிழக்கில் கழிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகம் உள்ளது. மத்தியக்கிழக்கில் இருந்து பௌத்தம் மேலோங்கியிருந்த ஆப்கானீஸ்தான் அல்லது காந்தாரம் மிக அருகேதான் இருந்தது.
கிழக்கின் மெய்ஞானத்தை உள்வாங்கி தன் ஞானதரிசனத்தை அடைந்த மனிதகுமாரனின் மகத்தான செய்தி மேற்குலகை நோக்கி விரிந்தது. ஆரம்பத்தில் அது பல்வேறு மதக்கூறுகளை உள்ளிழுப்பதாகவும் சமரசத்தையும் முழுமையையும் முன்வைப்பதுமாகவே இருந்தது. ஏசு என்னும் மாபெரும் ஞானகுரு ரோமப்பேரரசால் அடிமைப்பட்ட மக்களின் மீட்பராகவே இருந்தார். பின்னர் கிறித்தவம் ஆளும் வற்கமாகிய ரோமப்பேரரசின் மதமாக ஆகியது.
மாற்றமில்லாத ஒற்றை அமைப்பாக, விசுவாசத்தை மட்டுமே கோரக்கூடிய ஆக்ரமிப்பு சக்தியாக உலகை நோக்கி எழுந்த கிறித்தவம் ஏசுவின் கிறித்தவம் அல்ல, ரோமப்பேரரசர் கான்ஸ்டண்டைனின் கிறித்தவம். அந்தக் கிறித்தவத்தின் பிரதிநிதியே புனித சேவியர் அல்லது கால்டுவெல் .அவர்களிடம் இந்திய மரபுக்கு உரையாடும் திறப்புகளே இருக்கவில்லை. இஸ்லாமின் சாரமான ஆன்மீக நோக்கில் இருந்து ஸ¥பி மரபு கிளைத்தது போல கிறித்தவத்தின் சாரமாக ஒன்று கிளைத்து எழாத காரணத்தால் அந்த உரையாடல் இன்றுவரை நிகழவும் இல்லை.
இந்தக் காலகட்டத்தில் நாம் இந்து மெய்ஞான மரபின் சாரமாக கண்டடைய வேண்டியது அந்த மாபெரும் ஒருமைத்தரிசனத்தை. அதை நோக்கி அனைத்தையும் கொண்டுசெல்லும் சமன்வயத்தை. அதன் அடிப்படையில் எல்லா ஞானங்களையும் உள்வாங்கிக்கொள்ள முயலும் சம்யக் திருஷ்டியை. அதற்கு நம் மரபின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும்வெளிப்படையான விரிவான விவாதங்கள் அவசியம் .இந்து ம்ரபு என்பது என்றும் ஒரு விவாதக்களமே
நமது பாரம்பரியம் பன்மைத்தன்மையின் பாரம்பரியம். ஏற்பின் உரையாடலின் சமரசத்தின் பாரம்பரியம். அதுவே இன்று நம்மை மேலும் நாகரீகமான சமூகமாக ஆக்கும். தொன்மையான ரிஷிவாக்கியம் வேதத்தில் இவ்வாறு ஒலிக்கிறது
நான் ஒருபோதும் பிரம்மத்தை
நிராகரிக்காமலிருப்பேனாக!
பிரம்மம் என்னை ஒருபோதும்
நிராகரிக்காமலிருப்பதாக!
பரச்பர நிராகரிப்பு
ஒருபோதும் நிகழாதிருப்பதாக!
சுயமாக ஒளிவிடும் மகத்தான சிந்தனைகள்
என்னில் விளைவதாக!
அவை என்னில் விளைவதாக!
ஓம் ஓம் ஓம்
24 ஜனவரி 2009 அன்று கும்பகோணம் மூவர்முதலிகள் முற்றத்தின் சா ர்பில் நடந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை பகுதி 3
No comments:
Post a Comment