Sunday, November 24, 2013

அட்டமாசித்திகள்

Dr.Swaminathan asks:
>மோகனம் , வசியம், ஆகர்ஷணம் மூன்றும் கிட்டத்தட்ட ஒரே பொருள்படுவதாக இல்லையா?
>பேதனம், மாரணம், வித்வேஷனம் என்றால் என்ன?
>
>சுவாமிநாதன்
>லாஸ் ஏஞ்சலஸ்

அன்புள்ள சுவாமிநாதன்,
நீங்கள் கேட்டிருப்பவற்றிற்கு எழுதும் பதிலை எங்கிருந்து, எப்படி
 ஆரம்பிப்பது என்று திகைத்ததால் ஏற்பட்ட தாமதம்.
அட்டகர்மாக்களில் உள்ள மந்திரச்செயல்கள் மட்டுமல்லாது இன்னும்
வேறு பல பிரயோகங்களும் இருக்கின்றன. 'அட்டமாசித்திகள்' என்று வகைப்
படுத்தியிருந்தாலும்கூட அவற்றையும் தவிர்த்து மேலும் பல சித்திகள் இருக்கின்றன
அல்லவா? அதுபோலத்தான்.
ஒரு குறிப்பிட்ட பலனை ஏற்படுத்துவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட
கர்மாக்களை ஒன்றாக இணைத்துப் பயன்படுத்தும் முறைகளும் உண்டு. 
ஒரு கர்மாவின் ஆற்றலும் இன்னொரு கர்மாவின் ஆற்றலும் ஒன்றை ஒன்று 
தழுவியிருப்பதையும்(overlapping) காணலாம்.
நீங்கள் கேட்டிருப்பதுபோல, வசியமும் ஆகர்ஷணமும் சில குறிப்பிட்ட
பிரயோகங்களில் ஒத்திருக்கக்கூடும். அதுபோலவே வித்வேஷணமும் பேதனமும் ஒத்திருப்பதையும் காணலாம்.
சில உண்மைச் சம்பவங்களையும் எடுத்துக்காட்டி ஒவ்வொன்றாக விளக்க முயன்றிருக்கிறேன்.

         இந்த இடத்தில் தம்பனம், மோகனம், வசீகரம், ஆகருடணம், உச்சாடனம், பேதனம், மாரணம், வித்வேடனம் ஆகிய எட்டின் பெயர்களும் வருகின்றன. இவற்றை வடமொழியில் ஸ்தம்பனம், மோஹனம், வசியம், ஆகர்ஷணம், உச்சாட்டனம், பேதனம், மாரணம், வித்வேஷனம் என்று வழங்குகிறார்கள்.
 
         இவற்றில் உச்சாடனம் என்பது ஒரு குறிப்பிட்ட தேவதையையோ, அல்லது ஆவியையோ அழைப்பது, ஆட்டுவிப்பது, விரட்டுவது போன்ற செயல்களுக்குரிய மந்திரப்பிரயோகத்தைக்குறிக்கும்.இது ஒரு குறிப்பிட்ட செயலைக் குறிப்பதுவேயாகும். அட்டகர்மாக்களில் மிகவும் ஆபத்துமிகுந்த இரண்டு மூன்றில் இதுவும் ஒன்று என்று கருதப்படுகிறது.
         உச்சாரணம் என்பது எல்லாவிதச் செயல்களிலும் முக்கிய அங்கம்
 பெறுவது. அவ்வகையில் உச்சாடனத்திலும் உச்சாரணம் இடம்பெறும்.
 
ஸ்தம்பனம் (ஸ்தாபிதம்) = நிறுவுதல் ?
நிறுவுதலை 'ஸ்தாபனம்' என்று சொல்வார்கள்.
ஸ்தம்பனம் என்ற சொல் 'நிறுத்துதல்' - ஸ்தம்பிக்கச்செய்தல் என்ற 
பொருளில் வழங்கப்படுகிறது. உயிருள்ளவற்றின் அல்லது இயற்கை சக்திகளின்
போக்கையோ இயக்கத்தையோ ஸ்தம்பிக்கச்செய்வதே தம்பனவித்தையின் 
குறிக்கோள்.
'ஜலஸ்தம்பனம்' என்ற முறை நீரின் இயற்கைத்தன்மையை மாற்றிவிடும்.
நீரின் இயற்கையான போக்குகள் சில. மேலிருந்து கீழே ஓடிவரும். தான்
நிற்கும் இடத்தின் வடிவத்திற்கேற்றவகையில் அது தன்னையே நிரப்பிக்கொண்டு,
தன் வடிவத்தை அதற்கேற்றாற்போல அமைத்துக்கொள்ளும். தன் மீது விழும்
கனமாக பொருள்களை மூழ்கடிக்கச்செய்யும். காற்றைச் சுவாசிக்கும் உயிரிகளை
மூச்சுமுட்டச்செய்யும்.
ஜலஸ்தம்பனம் செய்பவர்கள் நீரின்மீது நடப்பார்கள். நீர் அவர்களை
மூழ்கடிக்காது. தாயுமானவர் பாடலில் வருகிறதே, 'நீர்£மேல் நடக்கலாம்'-
அது இதுதான்.

என்னுடைய குருநாதரின் குருவுக்கு குருவாகிய குஹாநந்தநாதர்,
ஒரு பிரம்மஞானி. பெரும்சித்தர். இமயமலையின் அடிவாரத்தில் எங்காவது அவர் 
சஞ்சாரம் செய்துகொண்டிருப்பவர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைமட்டுமே
கும்பமேளாவிற்காக இமயத்திலிருந்து வருவது அவருடைய வழக்கம். 
ஒவ்வோர் ஆண்டும், பனிக்காலம் தொடங்கவிருக்கும்போது, மானசரோவர்
என்னும் ஏரிக்குச்சென்றுவிடுவார். மானசரோவர் ஏரிதான் சிந்து, பிரம்மபுத்ரா
ஆகிய இரு பேராறுகளின் பிறப்பிடம். கங்கையின் பிறப்பிடமாகிய கங்கோத்ரி glacier
அதன் அருகில்தான் இருக்கிறது. மிகமிக அழகான, சிறப்புமிக்க ஏரியொன்றை
மனதால் கற்பனை செய்துபார்த்தால் எப்படியிருக்குமோ, அப்படியிருக்குமாம்
மானசரோவர். ஆகையால்தான் அதற்கு அப்பெயர்.
அந்த ஏரிக்குள் நடந்து சென்று நீருக்கு அடியில் அமர்ந்துவிடுவார்.
அங்கு மூச்சடக்கி, உடலின் இயக்கங்களையெல்லாம் நிறுத்தி, சமாதி நிலையை
ஏற்படுத்திக்கொள்வார். இதனை 'ஜலசமாதி' என்று சொல்வார்கள்.
பனிக்காலம் தொடங்கியதும் அந்த ஏரியின் மேற்பரப்பு பனிக்கட்டியாக
உறைந்துவிடும். மீண்டும் ஏரியின் மேற்பரப்பு உருகி திரவநிலையை
அடைந்தபின்னர் அவர் ஏரியிலிருந்து வெளியில்வருவார்.இவ்வாறு ஆறு
மாதங்கள் அவர் ஏரிக்குள் இருப்பார்.
இதுவும் ஜலஸ்தம்பனத்தைச்சேர்ந்ததுதான். 
கீழ்நோக்கிப்ப்பாயும் நீரின் ஓட்டத்தை எதிரோட்டமாகச்செய்வதும்
ஒருவகைதான். சில சித்தர்கள் ஆற்றின் போக்கை மாற்றி ஓடச்செய்ததாகச்
சொல்வார்கள்.
ஒரு பொருளை நீரிலும் மூழ்காமல், நீரின் போக்கையும்மீறி துடுப்பு, 
பாய்மரம் போன்ற உந்துவிசைகள் ஏதுமின்றி தானாகவே எதிர்த்து செல்லவைப்பதுவும் இந்த ஆற்றல்தான். திருஞானசம்பந்தரின் வரலாற்றில், அனல்வாதம் புனல்வாதத்தில் அவர் எழுதிய பாடலின் ஏடு, வைகை நீரில் மூழ்காமல், நீரோட்டத்தையும் எதிர்த்துச் சென்ற சம்பவத்தின் அடிப்படை ஜலஸ்தம்பனம்.

இன்னும் இருக்கிறது......

அன்புடன்

ஜெயபாரதி

No comments:

Post a Comment